கர்னாடக சங்கீதத்தில் எத்தனையோ ராகங்கள் உண்டு. பல பேர் அவற்றை கற்றுக் தேர்தலையும், அவற்றை நன்கு பாடுவதற்குக் குரல் வளத்தையும் செவ்வனே பெற்று முழுநேர இசை வித்வான்களாக இருக்கிறார்கள். மேலும் பல பேர் கச்சேரிகளில் சென்று ரசித்தாலும் , அவர்களும் நன்றாகப் பாடக்கூடிய திறமை பெற்று இருக்கிறார்கள். நான் என்னவோ இதில் கட்டங்கடைசி பெஞ்சு ரகம் தான். சில ராகங்களை என்னால் கண்டுபிடிக்க மட்டுமே முடிகிறது. சரி அவற்றைப் பற்றி கொஞ்சம் விரிவாக கற்றுக் கொள்ளலாம் என்றால் ஒன்றும் உருப்படியாக செய்ய முடியவில்லை. MP3 ப்ளேயரில் மகாராஜபுரம் சந்தானம் இழைந்து கொண்டு இருந்தார். சடாரென ஒரு வார்த்தை தான் தோன்றியது "வசந்தா". ஓடி போய் சரி பார்த்தால் அதே தான். என் அப்பா , இது வசந்தா ராகம் என்று பாடிகாட்டியது காதில் கேட்கிறது. மனதில் தெரிகிறது. ஆனால் எனக்கும் பாட வராது. எனக்கு தெரிந்த ராகங்களைக்கூட எனக்கு சொல்லிக்காட்ட வருவதில்லை. அதற்குரிய ஸ்வரங்களை க்கூட எனக்குத்தெரிவதில்லை. எனது மூளை சில ராகங்களுக்கும் மட்டும் வேலை செய்யக்கூடிய pattern matching algorithm மனசுக்குள் போட்டு வைத்து விட்டது போல் இருக்கிறது. (அப்பாடா! ஒரு வழியாகத் தலைப்புக்கும் பத்திக்கும் ஒரு தொடர்பு குடுத்தாச்சு). இந்த pattern matching-க்கும் நினைவு சக்திக்கும் ஒரு நல்ல பிணைப்பு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். நாம் கேட்ட ராகங்களை , நமது மூளை ஆழ் மனதில் எங்கேயோ ஒளித்து வைத்துக் கொள்கிறது. ஓரளவு நினைவாற்றல் உள்ளவர்களால் மறுபடி கேட்ட உடனே நினைவுகளில் தேடி எடுக்க மூளை உதவுகிறது. இந்த ஞாபக சமாச்சாரங்கள் வெறும் பயிற்சி மட்டுமே அல்ல. அது நம் முன்னோர்களின் ஜீன்களில் இருந்து வரும் என்று எனக்குத் தோன்ற ஆர்ம்பித்து இருக்கிறது.பள்ளி வகுப்பில் இருந்து அலுவலகம் வரை என் ஞாபக சக்தி மிகப் பிரசித்தம். என் அப்பா ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது,"அமரசிம்மன்" படத்தைப் பார்த்துவிட்டு வந்து, போர்வையைப் போர்த்துக்கொண்டு பாடங்களைப் பரீட்சைக்கு நினைவு படுத்திப் பார்த்துக்கொண்டிருந்ததைச் சொன்னபோதும், இன்னும் பல து ஞாபக சக்தி பற்றி சொன்னபோதிலும் என் ஞாபகத் திறன் அப்பாவிடமிருந்து வந்து இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அம்மா சாதாரணமாக என்னிடம் இப்போதேல்லாம் பேசுகையில், "2 வருஷத்துக்கு முன்னாடி, என் பார்க்கு பிரெண்ட் கிருகபிரவேசத்துக்கு போனபோது எனக்கு ஒரு எவர்சில்வர் தட்டுல ,மைசூர் ப்பாகு, முறுக்கு, கிளிப்பச்சை ரவிக்கைத் துணி எல்லாம் போட்டு ஒரு ப்ளூ கலர் பையிலே போட்டுக்குடுத்தா" அந்தத்துணிய இங்கே தான் பீரோல ஒரு மஞ்சள் துணிப்பையில போட்டு 3 வது தட்டுல வலதுபக்கம் 2 வது புடவைக்கு அடியில ரெண்டா மடிச்சு வைச்சு இருந்தேன். அதை காணலயே" என்று பலவற்றைப் போட்டு புள்ளி விவரப்புலியாக என்னைப் போட்டுத் தாக்குகிறாள். :). நானும் அவற்றை தேடி சலித்த போது சில பொருள்கள் கைக்கு அகப்பட்டு அங்க அடையாளங்கள் பொருந்தி என்னைக் கொஞ்சம் காப்பாற்றின. அம்மா பெரும்பாலும் எல்லா பொருள்களுக்கும் அல்லது நிகழ்ச்சிகளுக்கும் நேற்றய கணம் முதல் சுமார் 50 வருட ஹிஸ்டரி-ஐ த்தெளிவாகச் சேகரித்து மூளையில் வைத்துக் கொண்டு நாம் எதாவது சொல்ல ஆரம்பித்தவுடனே அட்டகாசமாக pattern matching செய்து எல்லா விபரங்களையும் ஒப்பிக்கத் தொடங்கி விடுகிறாள். எனக்குத் தான் அதை நிறுத்துவதற்குள் தலைசுற்றிப்போய் விடுகிறது :). அடுத்து நிலாக்குட்டி, பேசத்தெரியாத வயதிலேயே, அக்கா எங்கேயோ கைமறதியாக வைத்து விட்டுத் தேடிக்கொண்டிருந்த பொரி பாக்கெட்டை, அவளிடம் கேட்ட மாத்திரத்தில் ஒடிச் சென்று கண்டுபிடித்துக்கொடுத்தாள். இந்த வரிசையில் புது வரவாக கண்ணனும் 1+ வயதிலிருந்தே இதிது சே சேம் (இதுவும் இதுவும் சேம் சேம்) விளையாட்டில் பின்னி எடுக்கிறான். ஆக மொத்தம் இந்த pattern matching அறிவு வழி வழியாக அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லுகின்றன என்பதே என் தீவிர ஆராய்ச்சியின் முடிவாகும். மனித குலத்துக்கு முக்கியப் பங்காற்றிய என் இந்த ஆராய்சிக்காக எனக்கு வீடு தேடி வரப்போகும் முனைவர் பட்டத்தினையும் நோபல் பரிசினையும் வாங்குவதற்கு இப்போதிலிருந்தே காத்துக் கொண்டிருக்கிறேன் :).
Saturday, October 6, 2012
Thursday, October 4, 2012
ஜெயமோகன் கட்டுரைகள்:ஒரு வாசித்தலுக்கு அப்பால்
தலைப்பைப் பார்த்தவுடன் யாரும் இது தீவிரமான இலக்கிய விமரிசனமாக இருக்குமோ என்று பயப்பட்டு விடவேண்டாம். ஜெயமோகன் நாவல்களைவிட அவரது சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. பல வருடங்களாகவே அவரது கட்டுரைகளின் விசிறி நான். அவரது குழந்தைகள் அஜிதனும்,சைதன்யாவும் எனக்குள்ளும் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என ஒரு குரல் எனக்குள் எப்போது ஒலித்துக்கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் அவர் பெண் குழந்தையை பற்றி எழுதியதில், எல்லா தகப்பனும் எதோ ஒருகணத்தில் தனது பெண் குழந்தையை ஆராதிக்கும் கணத்தை உணர்வார்கள்.(கட்டுரை பெயர் நினைவில்லை.தேட வேண்டும்). இப்போது நிலாவும் கண்ணனும் பேசுவது எனக்கு அடிக்கடி இவர் குழந்தைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளையே நினைவூட்டுகிறது. துள்ளல் நடையில் எள்ளல் கலந்து எழுதிய பல நகைச்சுவைக்கட்டுரைகளை அலுவலகத்தில் படித்து, அடக்கமுடியாமல் சிரித்து விட்டு நண்பர்களில் கேள்விக் கணைகளுக்கும் பதி சொல்லமுடியாமல் தவித்திருக்கிறேன் நான். கடுமையான மனச்சோர்வு எற்ப்படும் போது இவரது நகைச்சுவை கட்டுரைகளைப் படித்தால், கவலைகளை எல்லாம் "லே மக்கா, விடுடா.அதெல்லாம் தூக்கிப்போடுடே" என்று சிரித்துக்கொண்டு வேறு வேலையை பார்க்கும் அளவிற்கு ஒரு சின்ன உற்சாகத்தைக் காண்கிறேன் என்னிடம் , அது தற்காலிகமாக இருந்தாலும் அது போது எனக்கு.
Subscribe to:
Comments (Atom)