ஒருவேளை ஒரு நாள் வீட்டிலிருந்த புத்தக குவியல்களுகிடையே இருந்த இந்த புத்தகத்தை நான் படிக்க தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம் புத்தகத்தலைப்பாக கூட இருக்கலாம். "மெட்ராஸில் மிருது யார் இந்த கொரூச்சகா? ". அட்டைப்படமும் 60-ல் வெளி வந்த விகடன் ஜோக்குகளையும் ஒரு சமயம் துப்பறியும் சாம்பு-வினையும் நினைவுபடுத்தியது.
அடுத்து வந்த முதல் கேள்வி, தமிழரான ஆசிரியர் ஏன் இந்தக்க கதையினை ஆங்கிலத்தில் எழுதி அப்புறம் தமிழாக்கம் செய்தார்.
முன்னுரையில் அரவிந்தன் "இந்தப் புத்தகத்தைப் படித்தால் உங்கள் கொரூச்சகாவும் உங்கள் நினைவுக்கு வரலாம். உங்கள் குழந்தையின் மன உலகை மேலும் துல்லியமாகப் புரிந்து கொள்ள இந்தக் கதை உங்களுக்கு உதவலாம். நவீன வாழ்க்கையும் வசதிகளும் அன்னியப் படுத்தி வைத்திருக்கும் இயற்கையின் பல்வேறு கூறுகளை உங்கள் குழந்தை உணர இந்தக் கதை துணை புரியலாம் " என்பதைப் படித்த போது எனக்கு சின்ன வயதில் இருந்த நண்பன் யாரும் என் நினைவுக்கு வரவில்லை.
பெரிதாக ஒன்றும் சுவாரசியமில்லாமல் படிக்கதொடங்கிய எனக்கு பல ஆச்சரியங்கள் கொஞ்ச நேரம் சென்றவுடன் ஏற்பட்டன. இந்தப் புத்தகத்தில் மிருதுவுக்குக் கிடைத்த "கொரூச்சகா" போல நான் அதுவரையில் ஆழ்ந்து கவனித்திராத என் மகளின் நண்பன் "கதாஸ்" கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முற்பட்டான்.
ஒரு நாள் தொலைபேசியில் பேசி க்கொண்டிருந்த மகளிடம் கேட்டதற்க்கு 'கதாஸுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்" என்றாள். என் மகள் வளர வளர கதாஸும் வளர்ந்து கொண்டிருக்கிறான். அவனும், ஜூனியர்ஸும் நிலா விளையாடும் போது ஓடி வந்து சேர்ந்து கொள்கின்றனர். வர முடியாத நிலையில் அவள் கதாஸுடன் தொலை பேசியிலும் பேசுகிறாள். அவளிடம் கேட்டறிந்த கதாஸ் செய்திகள் மிகவும் வியப்பூட்டுபவை யாக இருக்கின்றன. கதாஸ் தற்சமயம் பெங்களூரில் இருப்பதாகவும்,போன டிசம்பரில் இங்கு வந்து அவளை பார்த்துவிட்டு ச்சென்றதாகவும் கூறினாள்.
சில சமயம் பெங்களூரில் இருப்பவன், திடீரென இங்கே வந்து மகளுடன்(நிலா) "கபூச்சு" விளையாடிவிட்டுச் சென்றதும் நடந்திருக்கிறது.
நேற்று இரவு 10.30 மணிக்கு அனைவரும் தூங்கும் சமயத்தில் கண்ணனுடனும், நிலாவுடனும் கதாஸும் சேர்ந்து கொண்டு இரவு போடும் சப்தத்தை கண்டு பிடித்து (ஸ்...... ) எனக்கு காண்பித்துக்கொடுத்தனர். :)
அவர்களின் கோட்டிங் ஷோட்டி-யில் (Ghoating -Shoti) ஒரு ஸ்கூல், ஒரு ஜூனியர்ஸ் காலேஜ் அப்புறம் ஒரு ஆபீஸும் இருக்கிறது.
புத்தகத்தில் டாப்பி, தாத்தா, அம்மணி என்ற வயதானவர்கள் மூன்று பேரும் எப்பொழுது பார்த்தாலும் மிருதுவை ஏதாவது செய்யச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
"மிருது [நிலா] கை அலம்பு"
"மிருது! [நிலா] வா தலை பின்னி விடறேன்'
'மிருது! [நிலா] போய்க் குளி'
"மிருது [நிலா]சாப்பிட வா"
"மிருது! [நிலா] கொஞ்ச நேரம் தொந்தரவு பண்ணாதே"
'மிருது! [நிலா] நேரமாச்சு. போய்த் தூங்கு"
அய்யோ! இதை எல்லாவற்றையும் நானும் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வயதாகிக் கொண்டு வருகிறதா என்ன????
அப்பப்பா ...! நல்ல வேளை , இந்தத் தொல்லைக்கு நடுவில் ஒருநாள் அவளுக்கு கொரூச்சகா [ கதாஸ்] கிடைத்தான் :).
"மெட்ராஸி-ல் மிருது யார் இந்த கொரூச்சகா?" படிக்கப் படிக்க உங்களுக்கு உங்களின் குழந்தைகளின் செயல்கள் படம் போல விரியும்.
அவர்களின் விளையாட்டு நண்பனைக் நீங்களும் சந்தித்து, அவர்கள் பெரியவர்களானதும் நினைவுகளை மீட்டுக் கொடுங்கள்.
பின்குறிப்பு:
"மெட்ராஸி-ல் மிருது யார் இந்த கொரூச்சகா?" -
தமிழாக்கம் : பிரேமா ஸ்ரீனிவாசன், வஸந்தா சூரியா
காலச்சுவடு பதிப்பகம் . விலை ரூ ; 80
