சில நாட்களாகவே மனது மிகுந்த சஞ்சலத்திற்கு உட்பட்டிருந்த வேளையில், இன்று காலை சுமார் 6.40 மணி அளவிற்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. நஞ்சைப்புளியம் பட்டியிலிருந்து திரு கரிவரதராஜப் பெருமாள் அர்ச்சகர் திரு.ஸ்ரீனிவாசன் அண்ணா அவர்கள் பேசினார்கள். "அம்மா , இன்று மார்கழிப் பூரம். அப்பா அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் பூஜைக்குக் குடுப்பார்கள் இல்லையா? உங்களிடமிருந்து ஏதும் தகவல் வராத போதும் ஆசிரியர் நினைவாக பூஜை செய்து பிரசாதம் அனுப்பியுள்ளேன். பெற்றுக் கொள்ளாவும். உங்களுடைய தொலைபேசி எண் கொஞ்சம் சரியாகத் தெரியாததால், உங்கள் சகோதரிக்கு போன் செய்து இந்த எண்ணைப் பெற்றுக் கொண்டேன். உங்கல் மற்றும் சகோதரிகள் அனைவரின் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்து அனுப்பி இருக்கிறேன்" என்று சொன்னவுடன், பேசுவதற்கு நா எழாமல், கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தோடியது. ஊரைவிட்டு வெகு தொலைவில் வந்து 13 வருடம் ஆகியபோதும், இந்த நாளை நினைவில் வைத்து, அதுவும் மிகவும் முக்கியமான நிகழ்வொன்றைப்பற்றி இன்னாளில் மனத்தின்
எங்கேயோ ஒரு ஓர மூலை முடுக்கில் நான் அதைரியபட்டுக் கொண்டு சஞ்சலம்
அடையும் வேளையில் என் அய்யன் " நான் இருக்கிறேன் கவலைப்படாதே" என்று எல்லா
தூசுகளையும் அகற்றி பிரகாசிக்க வைத்து தன்னை தானே எனக்கு
காட்சியளிக்கிறான். காண்பிப்பதும், காணவைப்பதும் எல்லாம் அவன் செயலே.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன், திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன், புரிசங்கம் கைகண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று
<facebook-ல் போட்டிருந்த செய்தியை கொஞ்சம் விரிவாக்கியது>

No comments:
Post a Comment