Wednesday, January 22, 2014

சும்மா கிடந்த நோட்டும், கொஞ்சூண்டு காப்பித் தண்ணியும்!!!


அதான் தலப்ப பார்த்தவுடனே விளங்கிருக்கும் இல்ல. இன்னும் என்னத்த எழுதறது. அப்படியே கீழே கடைக் கண்ணாட்டி பார்த்துடுங்க வேலை முடிஞ்சுது.



புத்தக லிஸ்ட் 2014

புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்.:

    1. ஈரான் 1 & 2   மர்ஜானே சத்ரபி  விடியல் 
    2. மாயாவி இளவரசன் , விசாகன் , வானதி
    3. வயலின் வசந்தா, சாந்தா மூர்த்தி , வானதி
    4. மூளைக்கு வேளை , வாண்டு மாமா, வானதி
    5. விந்தை வினோதம் விசித்திரம், வாண்டு மாமா, வானதி
    6. மழைகாலமும் குயிலோசையும், மா.கிருஷ்ணன், காலச்சுவடு
    7. கலையை ரசித்தல் , ஒக்ககூரா காக்குஜோ, வ உ சி பதிப்பகம்
    8. எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, பஷீர், வ உ சி நூகலகம்
    9. அக்கடா, எஸ்.ராமகிருஷ்ணன், வம்சி
    10.  மூன்றாம்பிறை, கே.வி.ஷைலஜா, வம்சி
    11. வெண்கடல், ஜெயமோகன், வம்சி
    12. நீர்யானை முடியுடன் இருந்தபோது, NBT
    13. காடு, ஜெயமோகன், தமிழினி
    14. இன்றைய காந்தி, ஜெயமோகன், தமிழினி
    15. வாழ்வின் சில உன்னதங்கள், விட்டல் ராவ், நர்மதா
    16. யானை காணாமலாகிறது, ஹருகி முரகாமி, மலைகள் பதிப்பகம்
    17. லங்காபுரி ராஜா, பிரமிள், லயம் வெளியீடு
    18. சித்திரக்கதைகள், நிகோலஸ் ராத்ரோவ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    19. ரஷ்ய புரட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    20. பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி? அனதோலி தொமீல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    21. விளையாட்டுப் பிள்ளைகள், நிக்கலாய் நோரசவ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    22. லயன் காமிக்ஸ் புத்தகங்கள்

பழைய புத்தகங்கள்
  1. மனவாசம் , கவிஞர் கண்ணதாசன்
  2. மூவரை வென்றான், நா. பார்த்த சாரதி
  3. பொன்னி காமிக்ஸ் - ஏர்போர்டில் மாயாவி, இன்னும் சில
  4. ஒருசில பழைய மாத இதழ்கள்

Tuesday, January 21, 2014

2014 சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 2


வம்சி புக்ஸ் கடையில் "வெண்கடல்" "மூன்றாம் பிறை" "கதை நேரம் (குறுந்தகடு)  மூன்றும் உடனடியாகக் கிடைத்தன. பணம் செலுத்துமிடத்தில் அமர்ந்திருந்த பெண்மணி அவர்களைப் பார்த்து மையமாக சிரித்துவிட்டு அவர்களை எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று வெளியே வரும்வரை யோசித்துக் கொண்டே வந்தேன். வீட்டிற்கு வந்து மூன்றாம் பிறை புத்தகத்தைப் புரட்டிய போது அவர்களே (K.V. ஷைலஜா) பின்னட்டையில் இருந்தார்கள். கொஞ்சம் முன்பே பார்த்திருந்தால் அவர்களிடம் சில வார்த்தைகளாவது பேசிவிட்டு புத்தகத்தில் கையெழுத்து வாங்கி இருக்கலாம். ஒரு எழுத்தாளரிடம் முதன் முறையாக அளவளாவும் சந்தர்ப்பத்தை விட்டாயிற்று. :(

விடியல் பதிப்பகத்திற்கு அவரசரமாக ஓடி ஈரான் 1 & 2 (Persepolis)  பிரதிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு நிறைய இருக்கிறது என்று எடுத்து கொடுத்தார்கள். நான் அவர்களிடம் , போனவருடம் இந்த புத்தகத்தைக் கேட்ட பொழுது கொண்டு வந்த பிரதிகள் காலியாகி விட்டது என்று சொன்னதினால் கொஞ்சம் சந்தேகத்துடனே வந்தேன் என்று சொன்னேன். கடையிலிருந்த சிப்பந்தி கிடங்கில் நிறைய இருப்பதாகவும் யாரும் அதிகம் வாங்குவதில்லை என்றும் சொன்னார். புத்தகப் பதிப்பு பிரமாதென்பதும், ஈரான் என்கிற தலைப்பே மக்கள் ஆர்வம் காட்டாதற்கு காரணமா இருக்கலாமென்பதும் ரகுவின் அபிப்பிராயம். இது இப்படி இருக்கும் போது, வாங்குகின்ற சில வாசகர்களிடமும் பதிப்பு விலை ரூ70க்கு பதிலாக ரூ 100 என்று ஒட்டி விற்பது நியாயமா?
ஆனால் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் வானதி பதிப்பகத்தில் வாங்கிய வாண்டுமாமா,விசாகன் போன்றவர்களின் புத்தகங்கள் பதிப்பிக்கபட்டு இருந்த போது போட்ட விலையிலேயெ கிடைத்தன(முதற்பதிப்பு). வாழ்க வானதி.

உயிர்மையில் வாங்க நினைத்திருந்த "ஆது அந்தக் காலம்" "புரூஸ்லீ- சண்டையிடாத வீரன்" இரண்டு புத்தகங்களும்  பணப்பை இளைத்ததாலும், கைப்பெட்டி கனத்ததாலும் அடுத்த வருடத்திற்கு ஒத்திப் போடப்பட்டுள்ளன.

கால் களைத்துப் போய் பசி வயிற்றைப் பிடுங்கியதால் சாகித்ய அகெடமி மற்றும் சில பதிப்பகங்களைப் பார்க்காமலே கிளம்ப வேண்டியதாயிற்று. திரும்பி வரும் போது,எனக்காகவே புத்தகக் கண்காட்சிக்கு கூட வந்த அக்கா கணவரும் , பதிவுலகத்தில் பிரபலமான லிச்சி ஜூஸ் குடித்து விட்டு நடையைக் கட்டினோம்.


சென்னையில் ஆட்டோவில் செல்ல, இல்லாத சொத்தையும் எழுதிக்குடுத்துவிடக் கேட்கும்  ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மத்தியில் நந்தனம் கண்காட்சியிலிருந்து நங்கநல்லூர் வரை மீட்ட்ர் போட்டு மேலே பத்து ரூபாயைக் கூட சின்னக் குரலில் தயக்கத்துடனே கேட்ட ஒரு ஆட்டோ ஓட்டுனர் எங்களுக்கு அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்தார்.  ஒரு நினைவுக்கு அவரையும் ஆட்டோவையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
 
பின்குறிப்பு:
எதோ ஒருநாள் சம்பவத்தை கோர்வையாக எழுத நினைத்து பேனாவை எடுப்பதற்குள்ளாகவே கண்கள் இருட்டிக் கொண்டு வந்து மண்டை சூடாகி தலை வலி வந்து விட்டது. தட்டு தடுமாறி  ஒருவழியாக எழுதி முடிப்பதற்குள்ளாகவே தாங்கமுடியாத பிரசவ வேதனை என்பார்களே அது போன்ற அவஸ்தை பட்டாயிற்று. ஜெயமோகன் தினமும் ஒரு பகுதியாக தொடந்து 10 ஆண்டுகள் மகாபாரதம் எழுதுகிறாரே. அவர் காலில்விழுந்து கும்பிட வேண்டும் இருக்கிறது. அவர் வேகம் ஒரு அசுர வேகம்.
அவரின் வெண்கடல் முதல் கட்டுரையை பாதி படித்து விட்டு நிறுத்தி விட்டேன். இது வரை படித்ததிலேயே அமிழ்ந்து போய் கிடக்க வேண்டும் போல் தோன்றுகிறது. 

இந்த வருடம் படிக்க ஆரம்பித்த சில புத்தகங்களினாலேயே என் வேக வாசிப்பு மாறி விட்டது. கதையை தேடி ஓடிய என் மனத்தை "வெண்கடல்" ஆழ் அனுபவங்களைச் சுவைக்க இழுக்கிறது.


2014 சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 1

முன்குறிப்பு :

'உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக" என்று வர்ணிக்கப்பட வேண்டிய அளவில், வரலாற்றிலேயே முதன் முறையாக நான் பார்த்த முதல் புத்தகக் கண்காட்சி (சென்னை 2013) , என் உடல் பொருள், ஆவி இன்னும் பிற எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டதனால், இருக்கும் சமுத்திர தண்ணீரையெல்லாம் ஒரு அரை லிட்டர் பெப்ஸி பாட்டிலில் அடைப்பது போல ஒரே நாளில் சுமார் 800 கடைகளைச் சுற்றிப் பார்த்த ஆவேச வெள்ளத்தில் ஒரு பெட்டி, ஒரு பெரிய கட்டைப்பை நிறைய புத்தகங்களுடன் ஹைதராபாத் வந்து சேர்ந்தேன்.
--------------
மார்கழி ஆரம்பிப்பதற்குள்ளாகவே அடுத்த புத்தகக் கண்காட்சி ஜுரம் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. சரியாக டிசம்பர் 15 அன்றே மனம் பித்துப் பிடித்த குரங்காக, இணயத்தில் புத்தகப் பரிந்துரை பட்டியல்களுக்காகவும் வேறு புத்தக விபரங்களுக்காகவும் தாவ ஆரம்பித்தது. முன் அனுபவம் கை கொடுக்கும் என்று சும்மாவா சொல்லினார்கள். போன முறை கிடைத்த பளு தூக்கும் சோதனைக்குப் பிறகு, வாங்க வேண்டிய புத்தகங்களைத் தீர்மானிக்கும் முன்பே எடுத்து செல்ல வேண்டிய ட்ராலி பெட்டியைச் சுத்தம் செய்து வைத்து விட்டேன். புத்தகக் கண்காட்சிக்கு பெட்டியக் கொண்டு போய் புத்தகம் வாங்கின ஆள் நானாகத்தான் இருக்கும். :). திரும்பி வரும் போது வரும்போது ஒருவர் 'இங்க பாரு, பொட்டியெல்லாம் கொண்டு வந்திருக்காங்க" என்று சொல்ல, மனதில் ஒரு அல்ப சந்தோஷம் எட்டிப் பார்த்து 'ஏய் பூர்ணி...எப்டில்லாம் யோசிச்சிருக்க பாரு ...எங்கியோஓஓஓஓஒன் போய்ட்டெ' என்று சொல்லிவிட்டுப் போனது.

நுழைவுச்சீட்டு வாங்க போவதற்குள்ளாகவே திருஷ்டிப் பரிகாரமாக முதலில் கம்பளம் தடுக்கி விழுந்து மெல்ல எழுந்திருத்து  வாசலில் குடுத்த தம்மாத்தூண்டு பொங்கலை ஒரே வாயில் போட்டு விட்டு விடு ஜூட் உள்ளே. முதலில் ஓடி கர்ச்சீப் போட்ட லயன் காமிக்ஸ் கடையில், இருக்கும் புத்தகங்களை பில் போடும் போது இன்னும் சில புத்தகங்கள் தீர்ந்து போச்சு என்று கடைக்காரர் பொறாமைத்தீயை பத்த வைத்து விட்டார். அம்மாடி  லக்கி புத்தகங்கள் எல்லாம் கிடைத்ததே என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பொட்டி, பட்டியல் சகிதம் ஆட்டம் சூடு பிடித்தது.

ஒரு மாதமாக தயாரித்துக் கொண்டு போன பட்டியலின் திருத்திய சுருக்கிய எண்ணிக்கைக்கும் மேலாகவே புத்தகங்களை வாங்கினேன். ( ஹூம். என்னிக்கெல்லாம் பட்டியல்ல இருக்கற பொருள் மட்டும் வாங்கியிருக்கோம் இப்போ மட்டும் திருந்த :-).  ) கையில் கேமிராவும் கொண்டு போயிருந்ததால் சகட்டு மேனிக்கு கிளிக்கியும் தள்ளியாயிற்று.

பனுவல்-ல் ஹருகி முரகாமி பெயர் கண்ணில் பட்டு ஆர்வமாக உள்ளே நுழைந்து எடுத்த போது கடையிலிருந்த ஒருவர் என் கையிலிருந்த பட்டியலைப் ஒரு தரம் பார்த்துவிட்டு, எங்கோ ஓரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த "லங்காபுரி ராஜா" வை என்னிடம் நீட்டி மேடம் இதுவும் பிரமிளோடது தான். நீங்க தேடற 'கைப்பிடியளவு கடல்' ரதி எங்கியுமே இல்ல. பாருங்க இவங்களே யாராவது அந்த புத்தகத்தை வச்சு இருந்தா மறு பதிப்பு செய்ய குடுங்க னு போட்டு இருக்காங்க என்று முடித்தார். ஹை... வாலு போச்சு கத்தி வந்தது கணக்கா லங்காபுரி ராஜா பெட்டில விழுந்துட்டார். வீட்டுக்கு வந்து புத்தகத்தோட பதிப்பு ஆண்டு பார்த்த போது விலை 15க்கு பேனாவுல எண் 1 ஐ 4 ஆக மாற்றி இருந்தது தெரிந்தது. சரீ பில் போடும் பொழுதெல்லாம் இப்படி நடந்திருக்காது என்று நானும் ஒருவழியா சமாதானம் ஆகி விட்டேன். அங்கேயே ஜெயமோகனின் 'இன்றைய காந்தி" கேட்டபோது தமிழினியில் கிடைக்கும் என்றார்கள்.

இங்கேயும் ஒரு பதிவு படிச்சா இன்னொரு பதிவு இலவசம்..... :)

சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 2.....தொடரும்.....