Friday, August 19, 2011

மூன்று வரங்கள்

என் அப்பா அடிக்கடி ஒரு ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருப்பார்.  அப்போ எனக்கு ஒன்றும் பெரிதாகப் புரியவில்லை. 

அது  என்னமோ 3 வரங்கள் தான். உடனே வரக்கூடிய மரணத்தையும், எனக்கு ஒன்று தருவாயா என்று எப்போதும் யாரிடத்தும் யாசிக்காத நிலையையும், உன்னிடத்தில் நிலையான, சஞ்சலமில்லாத பக்தியையும் கொடு என்று அவர் எப்போதும் வேண்டிக்கொண்டிருந்தார்.

யோசித்துப் பார்த்தால் இங்கு உள்ள வாழ்க்கை முழுவதுமே இந்த மூன்றிடத்தில் அடங்கி விட்ட்டது என்றே தோன்றுகிறது.

இவை கிடைத்தால் இங்கு இருக்கும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று யோசிப்பதற்கு கொஞ்சமேனும் தெளிவு கிடக்கிறது.

அவருக்கும் இந்த மூன்றுமே இறையருளால் கிடைத்தது. 

இருக்கும் வரை தான் இறைவழியில் தளராத சந்தேகமில்லாத பக்தியுடனும்,  மற்றவரிடத்தில் சென்று ஒன்று கேட்பதற்கு இல்லாத நிலையில் தான் இருந்தார்ர். செல்லும் நேரம் வந்தவுடன் மற்றவருக்கும்,தனக்கும் பெருந்துன்பம் இல்லாதவகையிலே திடீரென புறப்பட்டு விட்டார்.

உலகில் உள்ள எல்லா சமூகங்களின் நம்பிக்கை போலவே உலகத்தில் கொடுப்பதும் பெறுவதுமான சமநிலை அடிப்படையாகவே இயங்கி வருகிறது. அதில் எது மாறினாலும் எல்லாவற்றின் இயல்பும் மாறிவிடுகிறது.

நானும் இப்போதிருந்து இதையே  கேட்கத்தொடங்குகிறேன்.

அனாயாசேன மரணம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வை பக்திம் அசஞ்சலாம்





Tuesday, August 2, 2011

பழசும் ~ புதுசும்

பங்களாப்புதூரில் இருந்தவரை அப்பாவுக்கு அடுத்தபடியாக வீட்டை ஒழிப்பதில்தான் (தப்பா நினைக்காதிங்க. வேண்டாத பொருள்களை கழித்துக்கட்டுவது தான்) ஆர்வமாக இருந்திருக்கிறேன். கைக்கு எட்டியவரை வீட்டில் இருந்த அனைத்து பெட்டிகளில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்வதில் நான் அத்துபடி. நாங்கள் குடியிருந்த வீடு அக்மார்க் கிராமத்து வீடு. உள்ளே களிமண்ணால் குழத்துக்கட்டப்பட்டு பட்டை ஓடு போட்ட ஒரு அறை. அப்புறம் கதவின் இரண்டு பக்கமும் இரட்டைத்திண்ணை, முடிவில் தென்னங்கீற்றுக் கூரை போட்ட ஒரு தாழ்வாரம் அவ்வளவு தான். ஆகவே குடைவதற்கு ஏதுவாகவே எல்லாப் பெட்டிகளும் ஒரு இரும்பு ரேக்கிலேயே தான் இருந்தன. அப்பா எப்பொழுதும் less luggage more comfort என்றே சொல்லிக்கொண்டிருப்பார். அதனாலே சின்ன வயசிலிருந்தே பொருள்கள் சேகரிக்க வேண்டும் என்ன ஆசையே இருந்ததில்லை.  நானும் அண்ணாவும் சேர்ந்து விட்டாலே அண்டாவைத் தூக்கி குண்டாவுல போடு அதைத் தூக்கி அடுப்புல போடு என்ற ரேஞ்சிலேயே பேசி அம்மாவை பயமுறுத்திக் கொண்டிருப்போம். எனக்கு கொஞ்சம் இந்த  சுத்தக்கிறுக்கு கொஞ்சம் கூடப் போய்விட்டாலே வீட்டையே காலி செய்ய வெக்கற அளவுக்கு கொஞ்சம் ஒடுக்கு விழுந்த அலுமினிய மூடியா, இல்ல இத்துணூன்னு கிழிஞ்ச பாவாடையா, இல்ல பழய கடுதாசிகளா...பிளாஸ்டிக் டப்பாக்களா இல்லாட்ட கண்ணுல படற எல்லா சாமான்களையும் தூக்கிப்போடுன்னு அம்மாவை கதற அடித்திருக்கிறேன்.

அம்மாவைக் கொஞ்சம் வெறுப்பேத்திப்பாக்கணும் என்று  நினைத்தால் போதும். தான் கல்யாணத்தின் போது சீதனமாக வந்த பெட்டியத்திறந்து "இதெல்லாம் ரொம்பப் பழைய புடவையா இருக்கே. தூக்கிப்போடு .இல்லேன்னா யாருக்காவது சும்மாக்குடு. நீ புதுசு வாங்கிக்கோ. ....ஒரு நாள் நீ வெளில போயிருக்கும் போது எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடறேன் ன்னு...கடபுடான்னு எல்லாம் சத்தம் போடுவேன். பரிட்சை ரிசல்ட் வரதுக்குள்ளியே, புக்கெல்லாம் பழைய பேப்பர் கடைக்காரனுக்கு போட்டுவிடலாம் ஒரே அடசலா இருக்கு என்றெல்லாம் அண்ணாவுக்கு யோசனை சொல்லியிருக்கேன்.

அண்ணாவுக்கு அப்புறம் பங்களாப்புதூரைவிட்டு ஒரேடியா ஹைதராபாத்துக்கு வரும்போது நேற்றுவரை புழங்கிய பாத்திரங்கள், படுக்கை ஆகிய அத்தியாவசிய சாமன்களைக்கூட எடுத்துவராமல் அம்மாவினுடைய 50 வருடக்குடித்தனத்தை கலைத்து விட்டு வெறும் துணிமணிகளுடன் அக்காவிடம் வந்தோம்.

இங்கு வந்தவுடனும் கூட ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சில சமயம் சனி, ஞாயிறு ஏன் வருகிறது என்று அம்மாவுக்கு கதி கலங்குமளவுக்கு , எங்களுக்குண்டான இழுப்பறைகளில் ஏன் அதை வச்சுருக்கே. இதை வச்சுருக்கே. நீ இந்த குப்பை எல்லாம் வச்சா நான் எப்படி வைக்கறது என்று ஆட்டம் கட்டியிக்கிறேன் (ஆனால் அம்மா பல சமயங்களில் வேண்டாததைதான் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிறாள் :)  என்பது வேறு விஷயம்)

காலம் இப்படிப் போய்க்கொண்டிருக்க சமீபத்தில் 2ம் அக்கா வீடு சென்றதி புதுக்கோட்டையில் இருக்கும் அரசு அருங்காட்சியம் சென்றுவந்தேன். அட்டகாசமாக இருக்கிறது. அப்போது தான் ஒரு விஷயம் புலப்பட்டது.. புதியவற்றை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். பழயது பழயதாகவே கிடைப்பது கடினம். இதை வீட்டில் குழந்தை பிறந்தவர்கள் நன்றாக உணர்ந்திருப்பார்கள். பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உபயோகப்ப்படுத்த கட்டுப்பழகிய பழைய பருத்திச்சீலைகளே சிறந்தவை. பருத்திதுணிகளானாலும் புதியவை பழகி மென்மையாவதற்குள் குழந்தையே வளர்ந்துவிடும் . போனமாதம் முதல்முறையாக ஹைதராபாத் சாலர்ஜங் மியூசியம் போனதிலிருந்து புரட்டிப்போட்டாற்போல ஆகிவிட்டது. இங்கே உள்ள பெரும்பான்மையான புராதன பொருள்களைத் தனிப்பட்ட முறையில் சேகரித்த சாலர்ஜங் வாழக்கை முழுவதும் இதற்க்காக வே செலவிட்டிருக்கிறார்.
------ ~~~~~~~~~~~~~~~~~~~ --------------------------
சரி பழய கதை இங்கேயே நிற்கட்டும். இப்போ புதுசுக்கு வருவோம்.

ஆகவே சமீபத்தில் எனக்கு எட்டிய உண்மைத்தெளிதனிலால் எனக்கு "டப்பாக்காதல்' ஏற்பட்டு விட்டது.  நிலாக்குட்டிக்கும் ,கண்ணா குட்டிக்கும் மிகவும் பிடித்த twister wafer rolls எனக்கும் ரொம்ப பிடித்து விட்டது. அதனுடைய டப்பாவினால். யார் கண்டார்? . இன்னும்  பல வருடம் கழித்து அதுவும் ஒரு பழம் பொருளாகி ஜொலிக்கலாம். இல்லை ...... நானும் திருமதி.அனுராதா ரமணன் எழுதிய "சீனி டப்பா" கதை போல ...இதை வைத்து ஏதாவது எழுதி பேர் பெறுவேனாயிருக்கும் :).....

எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி பழங்கால நாணயங்களுடன், நான் பங்களாப்புதூரிலே-யே விட்டுவிட்டு வந்த அம்மாவின் நல்லெண்ணெய் முட்டைக்கரண்டி, டினோபால் டப்பா, அம்மாவின் பித்தளை சாமான்கள்,நான் சின்ன வயதில் சேர்த்து பைண்ட் செய்து வைத்த கோகுலம் இதழ்கள், மாஜிக் மாலினி தொடர்கதை, 12ம் வகுப்பு ஆட்டோகிராப் புத்தகம், குமுட்டி அடுப்பு, அண்ணாவின் துணி வைக்கும் பெட்டி எல்லாம் தலையைச் சுற்றிச் சுற்றி வருகிறாற்போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது

நேற்று அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த போது , நான் ஒரு ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்தால்  தன்னுடைய பொருட்களை ஒழித்துகொடுக்க முடியுமா என்று கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்ததாகச் சொன்னாள். :). அம்மா சில சமயம் ஊரைப் பற்றியும் , வீட்டைக் காலி செய்தவற்றையும் பேசும் போது எதோ வருத்தம் மனதைப் பிசைகிறது.

ஆக மொத்தம் ரொம்ப யோசித்துப்பார்த்ததில் ஒருவிஷயம் புலப்பட்டது. நமக்கு வயதாகும் போது நம்முடன் இளமையிலிருந்து கூட இருக்கும் பொருள்கள் மேல் அன்பு பெருகுகிறது. பழைய பொருள்களில் நாட்டம் அதிகரிக்கிறது.

பின்குறிப்பு. : என்னை சாலர்ஜங் மியூசியத்துக்கும் திடீரெனக் கூட்டிகொண்டு போன ரகுவின் பிறந்த நாள் பரிசாக என்னுடைய பதிவு.

Friday, July 29, 2011

பங்கு

வழியெங்கும் வார்த்தைகள் சிதறிகிடக்கின்றன
செல்கிறேன் எனக்குண்டான சிலதை மட்டும் பொறுக்கிக்கொண்டு
பங்கு பிரித்து வெகுநாளாகி விட்டது.
கடன் வாங்கி பேசவேண்டியிருக்கிறது பலசமயத்தில்.....
சும்மாயிருக்கத் தெரியவில்லை எனக்கு.
தனியே சென்றிருக்கலாம் அப்போதே.....









Friday, July 22, 2011

இங்கிலீஷ், தமிழ் மற்றும் நான்.......

எனக்கும் இந்த இங்லீஷ்க்கும் இருந்த தொடர்பெல்லாம் காம்போசிசன் நோட்டு அப்புறம் 10வது-ல இருந்த sure shot notes இதனால தான் ஒடீட்டு இருந்து. அப்புறம் ஹைதராபாத்துல இருந்த அக்கா பொண்ணு என்னாவது இங்லீஷ்ல லெட்டர் போட்டா அண்ணா(அப்பா) எழுதித் தந்தத அப்படியே காப்பி அடிச்சு மிச்சம் இருக்கற இடத்துல ரெண்டு போட்டு 2 போட்டு வாத்து, குச்சி தென்னமரம், தண்ணி மீனுன்னு ஒப்பேத்திடுவேன்.

அப்பா வேலை பார்த்த ஸ்கூல்லியே தான் நானும் படிச்சேன். எப்பாவது தான் அப்பாட்ட சொல்லிக்குடுன்னு கேப்பேன். வீட்டில் என் புடுங்கல் தாங்க முடியாம ரெண்டாவதுலயே டியுசன்க்கு போய்சேருன்னு அனுப்பிட்டாங்க. அதிசயமா ஒருநாளு எட்டாவது படிக்கும்போடு எங்க அப்பாட்ட கணக்கு சொல்லித்தான்ன்னு கேட்டு அவரு சொல்லித்தரத்துக்குள்ள , "டூ இன்ட்டூ ஃபைவ் இஸ்சீக்கொல்ட்டு" அப்படீன்ல்லாம் இங்லீஷ்ல சொல்லக்க்கூடாது , ரெண்டு பெருக்கல் அஞ்சு சமம்ன்னு தான் சொல்லனும்-னு எங்க வாத்தியார் சொல்லீருக்கார் அப்படீன்னு ஒரே போடாப் போட்டேன். எங்க அப்பா பொறுக்க முடியாம தலைல அடிச்சுக்கிட்டார். இதுல கொடுமை என்னன்னா அவரு தமிழ் எம்.ஏ .அவருகிட்டியே வாலாட்டி ,காலாட்டி, இன்னும் என்னன்னாலாமோ செஞ்சு கடைசீல நீயாச்சு உன் கணக்காச்சுன்னு ஒரு பொறுமைத்திலகத்தையே தவிக்க வெச்சுட்டேன். நம்ம தமிழ்ப்பற்று அப்பிடி. :). அடுத்த ரெண்டு வருசத்துல இது அப்பயே திரும்பி நான் எதுக்கோ இஸ்சீகொல்ட்டு ன்னு சொன்னப்போ சரியா நேரம்பாத்து சொல்லி காமிச்சுட்டார்.

ஆனா அப்போல்லாம் சும்மா ஒரு தடவை படிச்சா போதும். பரிட்சை எழுத வரை மறக்கவே மாட்டேன். இது தான் எனக்கு கை கொடுத்துச்சு.  10வதுல இங்லீஷ்ல ஸ்கூல பர்ஸ்டு வேற. அப்படீன்னா நீங்களே புரிஞ்சுக்கோங்க என் மெமரி பவர் எப்படீன்னு.

ஊர்ல சும்மா அட்டகாசமா "வாங்க்க்க்கா" "ஏனுங்க்கா கூப்ட்ருந்தீங்களா' ன்னு கலக்கலா கோயமுத்தூர் பாஷை பேசீட்டு இருந்த புள்ளை , ஹைதராபாத்துக்கு திடீர்ன்னு வந்து நின்னா என்னத்தச்செய்யும் பாவம். சன்னல் கம்பிய பிடிச்சுக்கிட்டு யாராச்சும் தமிழ்ல பேசமாட்டாங்களான்னு பார்த்துக்கிட்டே இருப்பேன். இங்க அக்கா பொண்ணுக்கு தமிழ்,இங்லீஷ்,தெலுங்கு, ஹிந்தி 4 பாஷை தெரியும். அவ ஃப்ரெண்ட்ஸ் யாராவது வந்தா பதறி அடிச்சுக்கிட்டு அக்காகிட்ட ஓடி போய்டுவேன். எனக்குன்னு பார்த்து நெறயா இங்லீஷ் பேசற ஃப்ரெண்ட்ஸ் ஆவே புடிச்சு வெச்சுருந்தா அவ .. :).

எழுதும்போது இஸ், வாஸ், மிச்சம் மீதி எல்லாம் போட்டு கோடிட்ட இடங்களை நிரப்புக ஸ்டைல்ல எப்படியோ சமாளிச்சு எழுதிவேன். அதுவும் ஓரளவுக்கு சுமாராகவே தேறிடும் (ஹி ஹி ...இப்பவும் அப்படித்தான்...). பேசறது தான் கொஞ்சம் தந்தி அடிக்கும்.

ஹைதாராபா ஆபீஸ்ல என்னத்தவிர இன்னும் 3 பேருக்கு தமிழ் தெரியும்.அதுனால எப்படியோ வண்டி ஓட ஆரம்பிச்சுது. என்கூட சேர்ந்த பசங்களும் இதே நிலமைதான். அவங்க தெலுங்கு மீடியம். ஆனா அவங்க அவங்கக்குள்ளியே தெலுங்குல பேசிப்பாங்க. ஹிந்தியும் புரியுமாருக்கும். இங்க இங்கிலீஷே நொண்டுது. வேற என்னத்த பேசறது. கொஞ்ச நாளைக்கு ரொம்ம்ப்போ அமைதியான பொண்ணா காட்சி கொடுத்துக்கிட்டு இருந்தேன்.

ஒருநாள் அக்கா பையனோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்திருந்தான் அவங்கக்குள்ளே என்னமோ பேசி சிரிச்சிட்டு இருந்தாங்க. அதைக்கேட்டுட்டு, அப்புறம் அக்காகிட்ட போய் அதை தெரிஞ்சு ரொம்பத் தெளிவா, அடுத்த நாள் ஆபீஸ் போய் என் பக்கத்துல உக்காந்துக்கிட்டு இருந்த பையன் கிட்ட போய் பட்டுன்னு கேட்டுட்டேன். அவன் அத சத்தியமா எதிர் பார்க்கலை. ("நீக்கு பிச்செக்கிந்தா? எர்ரகட்டானுஞ்சு ஒச்சாவா")"உனக்கு பைத்தியம் பிடிச்சுருக்கா? எர்ரகட்டால இருந்து வந்திருக்கியா? ன்னு நான் தெள்ளத்தெளிவா கேட்டப்பறம் அவன் என்கிட்ட பேசி விவரமெல்லாம் வாங்கீட்டு , சும்மா அந்த பக்கம் போய்ட்டு இருந்த இன்னொருத்தன கூப்ட்டு பூர்ணி எதோ கேக்கறா.  பதில் சொல்லீட்டுப் போ ன்னு அவன வசமா சிக்க வச்சுட்டான். அன்னிக்கு ஆபீஸ் முடியறதுக்குள்ள அங்க வேலை பார்த்த MD தவிர மத்த எல்லாரும் எங்கிட்ட மாட்டிக்கிட்டாங்க.

இதுக்கப்பறம் நான் தெலுங்கு கத்துக்கறதுக்கு ஆவலா இருந்தும் பசங்க விடலை. பூர்ணி நீ இங்லீஷ் பேசினாத்தான் உனக்கும் நல்லது...எங்களுக்கும் ரொம்ப நல்லதுன்னு ஆப்பு வச்சுட்டாங்க. இப்படியே எதோ தட்டுத்தடுமாறி நானும் , அவங்களும் இங்லீஷ்லயே மாட்லாடறதுக்கு கத்துக்கிட்டடோம்.

இங்க வந்து 10 வருஷம் ஆகி தெலுங்கு கத்துக்கிட்டு ,எல்லாரும் கொல்ல்ட்டீ ன்னு கிண்டல் பண்ணாலும் , எங்கியாவது  யாராவது தமிழ்ல பேசறதக்கேட்டாலே, ஓடிப்ப்போய் நல்லாருகீங்களா? எந்த ஊருன்னு கேக்கத் தோணுது. செகந்தராபாத் தாவது பரவால்லை.நெறயா தமிழ் பேசறவங்க இருக்காங்க. 5 வருஷம் முன்னாடி எங்கியோ நந்தியால் போனப்போ எனக்கு அவ்வளவு தெலுங்கும் தெரியாது. அங்க கோவிலுக்கு ஒரு தமிழ்க்குடும்பம் வந்திருந்தாங்க. எனக்கோ போய்ப் பேசணும்னு கையும் காலும் பரபரங்குது. பேசறத்துக்கும் தயக்கமாருக்கு. கூட வந்தவங்கெல்லாம் ஓட்டித்தள்ளிட்டாங்க...

இப்பவும் என் இங்லீஷ் சுமார்தான். எதெதோ இங்லீஷ் blog எல்லாம் படிச்சாலும், எழுதணும்னா கொஞ்ச தயக்கம் தான். சமீபத்துல ரொம்ப தெரிஞ்ச சிலபேர்  இங்லீஷ் blog எல்லாம் பார்த்தேன். எல்லாருமே நல்லாத்தான் எழுதறாங்க. எனக்கு என்னமோ இங்லீஷ்ல எழுதரதெல்லாம் டெக்னிகல் தான் ன்னு ஒரு பிரமை. ஒரு 4 வருஷத்துக்கு மேலாவே அம்பி, டுபுக்கு, கானாபிரபா, அபிஅப்பா,-ல இருந்து இப்போ தக்குடு, அப்பாவி தங்கமணி ன்னு லிஸ்ட் ஏறிகிட்டே போகுது. எத்தன எத்தனயோ பேர் பிளாகெல்லாம் படிக்கப்படிக்க தா நானும் ஏதோ எழுதி வைக்கணும்னு எனக்குள்ள இருந்த எலிக்குட்டி பிராண்டிட்டே இருக்குது.

பின்குறிப்பு : நான் ஏன் தமிழ் வலைப்பூ தொடங்கினேன்னு என்னாமா பில்ட் அப் குடுத்துருக்கேன் பார்த்தீங்களா !!!!.:) :) :).

Tuesday, June 28, 2011

நல்ல காலம் திரும்புகிறது

பூர்ணி  :    என்னம்மா..எப்பபாரு இந்த பையெல்லாம் சுத்திச் சுத்தி வீடு    
                    முழுக்க ரொப்பி வைக்கறே. எங்க பாரு ஒரே குப்பையா இருக்கு.    
                     ஒரு நா  இல்லாட்டி ஒரு நா நீ இல்லாதப்போ எல்லாத்தையும் தூக்கி                      எறியப் போறேன் பாரு

அம்மா :   நான் எனக்கு வேணும்ன்னு வச்சிருந்தா உனக்கு என்ன பண்றது.
                   (அழும் குரலில்..சண்டைக்கு தயாராக)நானும் இங்க குப்பை தான்.
                   என்னையும் எங்கயாவது கொண்டு போய் விட்டுடு.

பூர்ணி  :  ஆ..ஊன்னா இத ஒன்னச் சொல்லிடு. எப்பப்பாரு இது ஒரு ரோதன.

அக்கா  :  (இடையில்) தான் எதயோ வச்சுண்ட்டு போறா. தன்னோட எதுக்கு
                   சண்டைக்கு நிக்கறே...

(சில நாட்களுக்குப் பிறகு)

பூர்ணி  :  அம்மா...அம்மா...எனக்கு ஒரு பிளாஸ்டிக் பை இருந்தாக்க்குடு...
                  இதயெல்லாம் போட்டுண்டு போகணும்.

அம்மா :  ஹூம். இப்ப மட்டும் வந்து என்கிட்ட கேளு....எல்லாத்தயும்   
                  தூக்கிப்போடு..... போடுன்னு சொல்லிட்டு இப்ப வந்து கேளு..
      
பூர்ணி :  ஆரம்பிச்சுட்டியா. நல்ல பை-யா இருந்தா வச்சுக்கலாம், ஒரு பை
                 வேணும்ன்னு கேட்டா.. கண்ணனுக்கு ஜட்டி சுத்தி வந்த பை எல்லாம்
                 எடுத்து வச்சுண்ட்டு உசுர எடுக்கறே...சரி இதக் குடு...சின்னதெல்லாம்
                 துக்கிப்போடு. வாழப்ப்பழம் போட்டு குடுக்கற பையெல்லாம் சுத்த 
                 வேஸ்டும்மா.

அம்மா:  இல்ல குப்பை போட வச்சுப்பேன்...  கொண்டா...சிறு துரும்பும் பல்
                 குத்த உதவும்.

பூர்ணி : பல்ல குத்தி செப்டிக் ஆகாம இருந்தாச் சரி.

-----------------  **************** ----------------------

இனிமேல் அம்மா பாலித்தீன் பைகளை பொக்கிஷம் போல் பாதுகாப்பாள் என்று நினைக்கிறேன்.

ஜூலை 1ம் தேதியிலிருந்து ஹைதராபாத் கடைகளில் பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி பாலித்தீன் கவர் பயன்படுத்தும் தனி நபர் ஒருவருக்கு ரூ 500-ம், கடைகளுக்கு அவற்றின் 10 மடங்கு trading licese fee - ம் அபராதம்
விதிக்கப்படும் என்று ஹைதராபாத் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

எப்படியோ கையில் கூடையுடன் மார்க்கெட், மளிகைக்கடைகளுக்கு செல்லும் பொற்காலம் திரும்புகிறது.  அன்னை பூமி கொஞ்சம் ஆசுவாசப்படட்டும். இந்தியா முழுக்க இந்தத் தடை விரைவில் அமுல் படுத்தப்படவேண்டும்
 


Thursday, May 19, 2011

அப்பல்லோவில் காத்திருத்தல்

இன்று(18/5/2011) நிலாக்குட்டியின் செக்கப்பிற்க்காக அப்பல்லோ ஹாஸ்பிட்டல் போயிருந்தோம். எந்த மால்களுக்கும் குறைவில்லாமல் ஹாஸ்பிட்டல்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. நவ நாகரிக மங்கையர்களும், ஆண்களும்,பெண்களும் சின்னக்குழந்தைகளும் எப்போது குறுக்கும் நெடுக்குமாக நடமாடிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது கண்ணில் படும் கட்டுப்போட்ட பேஷண்ட்களும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், சக்கர நாற்காலிகளுமே இது ஒரு வித்தியாசமான சூழல் என்று நினைவுபடுத்துகின்றன.  இல்லாவிடில் யார் யார் என்ன எப்படி இருக்கிறார்கள். எவ்வளவு விதமான முகங்கள் இருக்கின்றன. இந்த ஹேர்ஸ்டைல், புடவை, சுடிதார் எல்லாம் நன்றாக இருக்கிறதே என்று நோட்டம் விடுவதிலேயே கொஞ்சம் பொழுது போய்விடுகிறது. என் பக்கத்தில் உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்த அம்மா கிடைத்த அவகாசத்தில் மிகுந்த கவனமாக ஷீரடி சாய்பாபா சரித்திரத்தைப் படித்துக்கொண்டு இருந்தார். நான் இதை பேப்பரில் எழுதிக்கொண்டு இருந்தபோது நிலாக்குட்டியும் அவள் சித்தப்பாவும்(ஆனந்த்) மும்முரமாக "கலர்"(?) பாக்கற விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

நிலாக்குட்டி இங்கு வரும் போது தண்ணீர் பாட்டிலில் இருந்து நாதஸ்வரம் வாசிப்பது போல தண்ணீர் குடிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.  ஆனந்த், "நிலாகுட்டீ நாதஸ்வரம் எப்டி வாசிக்கறது" என்று கேட்டதற்கு, சிறிதும் யோசிக்காமல் "எச்ச பண்ணி வாசிக்கணும்" என்று நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு ஒரு பதில் சொன்னாள்.

வந்தவுடனே டாக்டரின் ரிஷப்சனிஸ்டிடம் சொல்லிவிட்டு அங்கிருந்த CoffeeDay ல் காபி குடித்துவிட்டு வந்தோம். அங்கு ஓரிரு ஐட்டங்களைத் தவிர எல்லாமே சிவப்புப்பொட்டு வைத்துக்கொண்டு மங்களகரமாக இருந்தன, நிலாக்குட்டிக்கு போனமுறை வாங்கிக்கொடுத்த ஓட்ஸ்-ஹனி குக்கி அநியாயவிலை பிஸ்கட் (1 ரூ 10) கூட இல்லை. அங்கு ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த இட்டலி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.  நல்ல வேளை அங்கு யாரும் அவரிடம் இங்கே உட்காரக்கூடாது என்று சொல்லவில்லை.

திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டு காத்துக்கொண்டிருந்தபோது சிவப்பு கவுன் அணிந்து கொண்டு ஒரு சின்னக்குழந்தை துரு துருவென்று விளையாடிகொண்டிருந்தது.  அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து அதே குழந்தை எதற்கோ வீறிட்டு அழுதபோது அதன் அப்பா தூக்கிக்கொண்டு வெளியே போனார்.

நான் எழுதிகொண்டிருப்பதை பார்த்துவிட்டு நிலாக்குட்டியும், என்னிடம் ஒரு பேப்பர் பேனா வாங்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு, "நாம்ப இப்போ Dr. ஷா-வை பார்க்கணும்" என்று அவளுடைய பிரத்யேகமான கையெழுத்தில் எழுதிக் காண்பித்தாள்.  அப்புறம் நிலாக்குட்டியும் சித்தப்பாவும் யானை விளையாட்டு விளையாடினார்கள். அவள் எழுதிவைத்திருந்த சீட்டை யானையிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள். யானையும் ஆசீர்வாதம் செய்து அதே சீட்டைத் திருப்பிக்கொடுத்தது. சிலதடவைகள் இது ஆனவுடன் யானையும் அவளும் அடுத்த வராண்டா வரைக்கும் வாக்கிங் சென்றுவிட்டு திரும்பி வரும்போது தரையிலுள்ள கட்டங்களில் கோட்டை மிதிக்காமல் வந்து சேர்ந்தனர்.

எங்களுக்கு முன்னால் செல்ல வேண்டியவர்கள் டாக்டரிடம் சென்றவுடன் இவளும் உடனே போகவேண்டுமென்று நச்சரிக்க ஆரம்பித்தாள். நான் இன்னும் ஒரு பத்து நிமிஷத்தில் உள்ளே போகலாம் என்று சொன்னவுடனே "பத்து நிமிஷம் ரொம்ப நேரமா?" என்று கேட்டாள். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

யானை "யாசீர்வாதம்" செய்ய என்னாவது கொடுக்க வேண்டுமென்று சொல்லி பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டில், என்னுடைய கைப்பை எல்லாவற்றையும் கொடுத்தாகிவிட்டது. யானையும் அவளை "யாசீர்வாதம்" செய்து எல்லாவற்றையும் திருப்பிக்கொடுத்துவிட்டு, சளியாக இருக்கிறது, தும்மல்போடுகிறேன் என்று சொல்லிவிட்டு தாளம் போட்டுக்கொண்டு இருந்தது. :). அவளும் "தகிட தகிட" என்று பின் தாளம் போட்டாள்"

நாங்கள் டாக்டரின் ரூமுக்குச் செல்ல எழுந்தபோது, எங்களுக்கு முன்னால் ஒரு அம்மா, கிடைத்த சந்தில் சிந்து பாடி (மாமியின் உவமை :) ) உள்ளே நுழைந்து விட்டபோது, காத்திருக்க முடியாமல் யானையும் நிலாக்குட்டியும், (Shrek)ஷ்ரெக்காகவும், கழுதையாகவும்(நிலா) வேறு அவதாரம் எடுத்துக் கொண்டு விட்டதும் அல்லாமல், கையை மடக்கி போனாக வைத்துக் கொண்டு மும்முரமாக பேச ஆரம்பித்துவிட்டன. போதாக்குறைக்கு கழுதை அதன் அம்மாவிற்கு கூட( வேற யாரு...நாந்தேன் :(  )  ஒரு போன் போட்டது.

ஒருவழியாக 2 மணி நேரக்காத்திருப்புக்கு பின் டாக்டரின் ரூமிற்குள் நுழைந்தோம்.

பின்குறிப்பு:

இது ஒரு நகைச்சுவைப் பதிவாகத் தோன்றினாலும் மருத்துவரிடம் சென்றது ஒரு சீரியஸான நிகழ்வு குறித்து. அந்த காத்திருப்பில் எற்படக்கூடிய கவலை தரக்கூடிய ஆலோசனைகளை சற்றே ஒதுக்கி, ஒரு சிறுமியின் செயல்கள் அவளை ஆர்வத்துடன் கவனிக்க வைத்து அதைப் பதிவு செய்யவும் தூண்டின.

Monday, May 16, 2011

நரசிம்ம ஜெயந்தி

போன நரசிம்ம ஜெயந்திக்கு ஒரு பதிவு போட்டபிறகு பிளாக் பக்கமே வரமுடியவில்லை. ஒரு வருடம் வேகமாக ஓடி விட்டது. இந்த வருடமும் மட்டபல்லி சினேகிதர்களோடு சென்று வரலாம் என்று பிளான் போட்டு கடைசியில் கண்ணனை ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு இருக்க வேண்டியதாய்ப் போயிற்று. கண்ணன் போன வருடம் புதுச்சட்டை எல்லாம் போட்டு அட்டகாசமாக கொண்டாடினான். இன்று ஒன்னும்  ஸ்பெ ஷல் இல்லை. குளித்துவிட்டு சாப்பிட்டதே இன்று பெரிதான விஷயமாகி விட்டது. நரசிம்மரை ஒரு நிமிஷம் கண்மூடி தியானித்துவிட்டு வேறு வேலை பார்க்கப்போய்விட்டேன்.

Sunday, May 15, 2011

Sach Brand

மாரட்பல்லி food bazaar-ல்  Sach Brand ஐட்டங்கள் ஏகப்பட்டது கொட்டி வைத்திருக்கிறார்கள். பேஸ்ட், பிரஷ் இத்தியாதிகள். அறிமுகச்சலுகை விலை என்பதால் நானும் ரெண்டு மூணு பொருள்கள் வாங்கி வைத்திருக்கிறேன். பிரஷ் ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை. கல்லு மாதிரி இருக்கிறது. முதல் நாள்  தேய்த்துவிட்டு நொந்து போய்விட்டேன்.  ஒருவேளை காலியாகப்போகும் ரீபில் பேனா கடைசியில் நம் கையில் பழகியிருப்பதைப் போல கடைசியில் தான் அட்டகாசமாக இருக்குமா?. அப்படி இருந்தால் நினைப்பாக சீப்புத் தேய்க்க எடுத்து வைத்துவிட வேண்டும்.

Mixed Fruit Juice எனக்கும் நிலாக்குட்டிக்கும் பிடித்திருந்தது. நிலா குட்டி அதனுடன் இலவச இணைப்பாக வந்த பெட் பாட்டிலுடன் ஒரு நாள் முழுக்கச் சுற்றினாள். அப்புறம் பாட்டில் மூடி இரண்டும் நிலாக்குட்டியிடம் சண்டை போட்டுக் கொண்டு எங்கேயொ போய்விட்டன தனித்தனியாக. என்று வீட்டில் எல்லாம் ஜோடியாக இருந்தன இப்போது இருப்பதற்கு? :). இன்று பேஸ்ட்க்கு திறப்பு விழா. சுமாராக இருந்தது. ஏன் நாம் எப்போதும் புது brand முன்புள்ளவற்றிலிருந்து முற்றும் விலகி இருக்க வேண்டுமென்று முதலில் எதிர் பார்க்கிறோம்?. ஒருவேளை  சச்சினே விளம்பரத்தில் இந்த பிரஷ் எடுத்து, இதே பேஸ்ட்டைப் போட்டு பல் தேய்த்து விட்டு, இந்த ஜுஸ் குடித்து விட்டு சென்றதனால் தான் என்னால் உலகக்கோப்பையில் சிறப்பாக ஆட முடிந்தது என்று சொன்னால், அடுத்த உலகக்கோப்பை வரைக்கும் இந்த brand தாக்குப்ப்பிடிக்கலாம்.

Thursday, April 28, 2011

ஆழ்மனம்

திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று ஒரு குரல்
தினமும் என்னுள் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது-அது
என்னை அளவில்லாப் பெருவளிக்குள் நுழைத்துவிட்டது
தருவதும் பெறுவதுமான செயல்கள் மட்டுமே சுழன்றடிக்கின்றன
வேறெதற்கும் இடம் கொடாமல்.