Tuesday, August 2, 2011

பழசும் ~ புதுசும்

பங்களாப்புதூரில் இருந்தவரை அப்பாவுக்கு அடுத்தபடியாக வீட்டை ஒழிப்பதில்தான் (தப்பா நினைக்காதிங்க. வேண்டாத பொருள்களை கழித்துக்கட்டுவது தான்) ஆர்வமாக இருந்திருக்கிறேன். கைக்கு எட்டியவரை வீட்டில் இருந்த அனைத்து பெட்டிகளில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்வதில் நான் அத்துபடி. நாங்கள் குடியிருந்த வீடு அக்மார்க் கிராமத்து வீடு. உள்ளே களிமண்ணால் குழத்துக்கட்டப்பட்டு பட்டை ஓடு போட்ட ஒரு அறை. அப்புறம் கதவின் இரண்டு பக்கமும் இரட்டைத்திண்ணை, முடிவில் தென்னங்கீற்றுக் கூரை போட்ட ஒரு தாழ்வாரம் அவ்வளவு தான். ஆகவே குடைவதற்கு ஏதுவாகவே எல்லாப் பெட்டிகளும் ஒரு இரும்பு ரேக்கிலேயே தான் இருந்தன. அப்பா எப்பொழுதும் less luggage more comfort என்றே சொல்லிக்கொண்டிருப்பார். அதனாலே சின்ன வயசிலிருந்தே பொருள்கள் சேகரிக்க வேண்டும் என்ன ஆசையே இருந்ததில்லை.  நானும் அண்ணாவும் சேர்ந்து விட்டாலே அண்டாவைத் தூக்கி குண்டாவுல போடு அதைத் தூக்கி அடுப்புல போடு என்ற ரேஞ்சிலேயே பேசி அம்மாவை பயமுறுத்திக் கொண்டிருப்போம். எனக்கு கொஞ்சம் இந்த  சுத்தக்கிறுக்கு கொஞ்சம் கூடப் போய்விட்டாலே வீட்டையே காலி செய்ய வெக்கற அளவுக்கு கொஞ்சம் ஒடுக்கு விழுந்த அலுமினிய மூடியா, இல்ல இத்துணூன்னு கிழிஞ்ச பாவாடையா, இல்ல பழய கடுதாசிகளா...பிளாஸ்டிக் டப்பாக்களா இல்லாட்ட கண்ணுல படற எல்லா சாமான்களையும் தூக்கிப்போடுன்னு அம்மாவை கதற அடித்திருக்கிறேன்.

அம்மாவைக் கொஞ்சம் வெறுப்பேத்திப்பாக்கணும் என்று  நினைத்தால் போதும். தான் கல்யாணத்தின் போது சீதனமாக வந்த பெட்டியத்திறந்து "இதெல்லாம் ரொம்பப் பழைய புடவையா இருக்கே. தூக்கிப்போடு .இல்லேன்னா யாருக்காவது சும்மாக்குடு. நீ புதுசு வாங்கிக்கோ. ....ஒரு நாள் நீ வெளில போயிருக்கும் போது எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடறேன் ன்னு...கடபுடான்னு எல்லாம் சத்தம் போடுவேன். பரிட்சை ரிசல்ட் வரதுக்குள்ளியே, புக்கெல்லாம் பழைய பேப்பர் கடைக்காரனுக்கு போட்டுவிடலாம் ஒரே அடசலா இருக்கு என்றெல்லாம் அண்ணாவுக்கு யோசனை சொல்லியிருக்கேன்.

அண்ணாவுக்கு அப்புறம் பங்களாப்புதூரைவிட்டு ஒரேடியா ஹைதராபாத்துக்கு வரும்போது நேற்றுவரை புழங்கிய பாத்திரங்கள், படுக்கை ஆகிய அத்தியாவசிய சாமன்களைக்கூட எடுத்துவராமல் அம்மாவினுடைய 50 வருடக்குடித்தனத்தை கலைத்து விட்டு வெறும் துணிமணிகளுடன் அக்காவிடம் வந்தோம்.

இங்கு வந்தவுடனும் கூட ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சில சமயம் சனி, ஞாயிறு ஏன் வருகிறது என்று அம்மாவுக்கு கதி கலங்குமளவுக்கு , எங்களுக்குண்டான இழுப்பறைகளில் ஏன் அதை வச்சுருக்கே. இதை வச்சுருக்கே. நீ இந்த குப்பை எல்லாம் வச்சா நான் எப்படி வைக்கறது என்று ஆட்டம் கட்டியிக்கிறேன் (ஆனால் அம்மா பல சமயங்களில் வேண்டாததைதான் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிறாள் :)  என்பது வேறு விஷயம்)

காலம் இப்படிப் போய்க்கொண்டிருக்க சமீபத்தில் 2ம் அக்கா வீடு சென்றதி புதுக்கோட்டையில் இருக்கும் அரசு அருங்காட்சியம் சென்றுவந்தேன். அட்டகாசமாக இருக்கிறது. அப்போது தான் ஒரு விஷயம் புலப்பட்டது.. புதியவற்றை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். பழயது பழயதாகவே கிடைப்பது கடினம். இதை வீட்டில் குழந்தை பிறந்தவர்கள் நன்றாக உணர்ந்திருப்பார்கள். பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உபயோகப்ப்படுத்த கட்டுப்பழகிய பழைய பருத்திச்சீலைகளே சிறந்தவை. பருத்திதுணிகளானாலும் புதியவை பழகி மென்மையாவதற்குள் குழந்தையே வளர்ந்துவிடும் . போனமாதம் முதல்முறையாக ஹைதராபாத் சாலர்ஜங் மியூசியம் போனதிலிருந்து புரட்டிப்போட்டாற்போல ஆகிவிட்டது. இங்கே உள்ள பெரும்பான்மையான புராதன பொருள்களைத் தனிப்பட்ட முறையில் சேகரித்த சாலர்ஜங் வாழக்கை முழுவதும் இதற்க்காக வே செலவிட்டிருக்கிறார்.
------ ~~~~~~~~~~~~~~~~~~~ --------------------------
சரி பழய கதை இங்கேயே நிற்கட்டும். இப்போ புதுசுக்கு வருவோம்.

ஆகவே சமீபத்தில் எனக்கு எட்டிய உண்மைத்தெளிதனிலால் எனக்கு "டப்பாக்காதல்' ஏற்பட்டு விட்டது.  நிலாக்குட்டிக்கும் ,கண்ணா குட்டிக்கும் மிகவும் பிடித்த twister wafer rolls எனக்கும் ரொம்ப பிடித்து விட்டது. அதனுடைய டப்பாவினால். யார் கண்டார்? . இன்னும்  பல வருடம் கழித்து அதுவும் ஒரு பழம் பொருளாகி ஜொலிக்கலாம். இல்லை ...... நானும் திருமதி.அனுராதா ரமணன் எழுதிய "சீனி டப்பா" கதை போல ...இதை வைத்து ஏதாவது எழுதி பேர் பெறுவேனாயிருக்கும் :).....

எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி பழங்கால நாணயங்களுடன், நான் பங்களாப்புதூரிலே-யே விட்டுவிட்டு வந்த அம்மாவின் நல்லெண்ணெய் முட்டைக்கரண்டி, டினோபால் டப்பா, அம்மாவின் பித்தளை சாமான்கள்,நான் சின்ன வயதில் சேர்த்து பைண்ட் செய்து வைத்த கோகுலம் இதழ்கள், மாஜிக் மாலினி தொடர்கதை, 12ம் வகுப்பு ஆட்டோகிராப் புத்தகம், குமுட்டி அடுப்பு, அண்ணாவின் துணி வைக்கும் பெட்டி எல்லாம் தலையைச் சுற்றிச் சுற்றி வருகிறாற்போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது

நேற்று அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த போது , நான் ஒரு ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்தால்  தன்னுடைய பொருட்களை ஒழித்துகொடுக்க முடியுமா என்று கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்ததாகச் சொன்னாள். :). அம்மா சில சமயம் ஊரைப் பற்றியும் , வீட்டைக் காலி செய்தவற்றையும் பேசும் போது எதோ வருத்தம் மனதைப் பிசைகிறது.

ஆக மொத்தம் ரொம்ப யோசித்துப்பார்த்ததில் ஒருவிஷயம் புலப்பட்டது. நமக்கு வயதாகும் போது நம்முடன் இளமையிலிருந்து கூட இருக்கும் பொருள்கள் மேல் அன்பு பெருகுகிறது. பழைய பொருள்களில் நாட்டம் அதிகரிக்கிறது.

பின்குறிப்பு. : என்னை சாலர்ஜங் மியூசியத்துக்கும் திடீரெனக் கூட்டிகொண்டு போன ரகுவின் பிறந்த நாள் பரிசாக என்னுடைய பதிவு.

No comments:

Post a Comment