Friday, April 30, 2010
என் முதல் சம்பாத்தியம்.-2
எங்க வீட்டுகாரங்க வீடு எப்படீன்னா, இது மாதிரி நெல்லு, வெங்காயம்னு கொட்டி சேமிச்சு வச்சுக்கற மாதிரி பெரிய வராண்டா,திண்ணை,வாசல்ன்னு அமர்க்களமா இருக்கும். மத்தியானமெல்லாம் எல்லா பொம்பளைகளும் ஒரே எடத்துல சேர்ந்தாங்கன்னா கேக்கணுமா. ஒரே கலக்கலா இருக்கும் போங்க. வெத்தல பாக்கு போடறது, பாதி இல்லைன்னா ஒரு வெத்தல அடுத்தவங்ககிட்ட கேட்டு வாங்கறது, யாராரு வீட்டுல என்னென்னனு நாயம் அடிக்கறதுன்னு ஒரே பிஸியா இருக்கும். ஆனா கைபாட்டுக்கு தாள் அரிஞ்சிட்டு இருக்கும். வெங்காயம், தாளு, ஈர மண்வாசம், பெருசுங்க போடற வெத்தலை பாக்கு ன்னு அந்த எடமே ஒரு கலவையான வாசம் அடிக்கும். நான் அதுக்கும் எங்க வீட்டுக்குமா ஒரு ரவுண்டு அடிச்சுக்கிட்டே இருபேன். நான் வெங்காயம் தாள் அரிச்சு சம்பாதிச்சதெல்லாம், எங்க வீடு இட்லிக்கு, வெங்காய சாம்பார் செஞ்சே காலியாப்போச்சு. ஆனா மனசுல அந்த வாசம் அப்படியே இருக்கு.
காலேஜ் முடிச்சு வேலைக்கு வந்தப்பறம் முதல் மாச சம்பளமா 1500 ரூ செக்கா வாங்கினேன். அக்கா வீட்டுல இருந்து வேலைக்கு போயிட்டு இருந்ததால செலவு ஒன்னுமில்ல. அதை அப்படியே பேங்குல போட்டுட்டேன். என் முதல் மாச சம்பளம் இன்னும் செலவாகலை.
Thursday, April 29, 2010
என் முதல் சம்பாத்தியம்.-1
அப்புறம் ரெண்டாந்தடவை 2 படியோ என்னமோ உடைச்சு திரும்பியும் காசு வாங்கினதா நினைவு.இப்படி செய்யறேன்னு வீடுல சொல்லல. கைல மொத சம்பளம்(?) வாங்கினப்பறம் ஒரே ஓட்டம் தான் வீட்டுக்கு. அப்பாகிட்ட நானே சம்பாதிச்சதுன்னு ரொம்ம்ப பெருமையா நீட்னேன். அப்பா என்ன சொன்னாரோ எனக்கு எல்லாம் நெனைப்பில்ல.ஆனா அந்த காசை செலவு பண்ணக்கூடாது வீட்டுக்கு ரக்ஷைன்னு சொல்லி உடனே மஞ்சள் துணில முடிஞ்சு சாமி பக்கத்துல வச்சு பீரோல வச்சுட்டார்.
அது இன்னமும் எங்க அம்மா கல்யாணத்துக்கு பரிசா வந்த சோப்பு பவுடர் வச்சுக்கற டப்பாவுல, தாத்தாவோட கிரிமென்ஸ் கோட் பட்டன், பாட்டி கைல கடைசியா குடுத்து வாங்கின காசு, வரலக்ஷ்மி பூஜை பிரசாதம் மற்றும் பல பொக்கிஷங்களுக்கு இடைல பத்திரமா இருக்கு.
Wednesday, April 28, 2010
பார்வைகள் புதிது
நாம புதுசா பொறந்த குழந்தைய பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போனா என்ன செய்வோம்?. பாப்பா அம்மா மாதிரி இருக்கு, அப்பா மாதிரி இருக்குன்னு ஆளாளுக்கு ஒன்னு சொல்லுவோம். கொஞ்சம் பெரியவங்களா இருந்தா ஒடனே காது மடலைப் பார்த்துட்டு பையன் கொஞ்சம் மாநெறமாத்தான் வருவான் அப்படீம்பாங்க!!!
ஆனா ஒரு அக்கா (2 1/2 வயது) தன் தம்பிய பார்த்துட்டு எப்டி வர்ணிக்கறா பாருங்க...- தம்பி சூப்பரா இருக்கான்.
- குட்டியூண்டு கை நன்னாருக்கு
- முடி நன்னாருக்கு
- கொஞ்சூண்டு முடி இருக்கு
பொக்கை நன்னாருக்கு.பல்லு வேண்டாம் அப்படீங்கறா :)
அவன் டையப்பர் கட்டாத போது பார்த்துட்டு, இதென்ன இப்பிடி இருக்குன்னு கடைசீயா ஒரு கேள்வி வேற கேட்டா. :-) (எல்லாத்தையும் கேள்வி கேட்டு பழகணும்ன்னு அவிங்க அப்பா சொல்லி குடுத்திருக்காராம்)அவளுக்கு எல்லாமே ஆச்சரியமா இருக்கு....
அவளுக்காகவே ஒரு கவித...பின்குறிப்பு: சரி சரி.....கவிதையின்னு தெரியாம சொல்லீட்டம்பா... மன்னிச்சுக்கங்க....பட்டாணியும், பொட்டுக்கடலையும் நான் அவங்களுக்கு வச்சுருக்கற செல்லபேர்...ஒரு பட்டாணியே
பொட்டுக்கடலையை பார்த்து
வியக்கிறதே (ஆச்சர்யக்குறி) !!!
Tuesday, April 6, 2010
புரத ஒழுக்கு நோய் | Nephrotic Syndrome
வணக்கம்.
சில வருடங்களாகவே எல்லா தமிழ் வலைப் பூக்களை தேடித் தேடி படிச்சிகிட்டு இருந்தாலும், சொந்தமா ஒரு பக்கம் ஆரம்பிக்க தயக்கமாவே இருந்தது. வலையுலகுல நீ, நான் ன்னு எல்லாரும் வரிஞ்சு வரிஞ்சு சுவாரஸ்யங்களான விஷயங்களா எழுதும்போது, நான் என்னாத்தன்ன எழுதறது? ஆனது ஆகட்டும்-னு தில்லா இன்னிக்கு நானும் ஆரம்பிச்சுட்டேன். முதல் இடுகை யாருக்காவது பயனுள்ளதாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
புரத ஒழுக்கு நோய் | Nephrotic Syndrome
கைகுழந்தைகளுக்கு காய்ச்சல், சளின்னாலே புது பெற்றோருக்கு பயம் வந்திடும். டாக்டர் குடுக்கற அட்வைஸுக்கு மேல பக்கத்துல, சுத்தி, அப்புறம் வீட்டுல இருக்கற பெரியவங்கன்னு எல்லாரும் மாத்தி மாத்தி வைத்தியம் சொல்லி நம்மளுக்கு பைத்தியம் பிடிக்க வச்சுருவாங்க.
நெப்ரோடிக் சிண்ட்ரோம் அதாவது புரத ஒழுக்கு நோய், அதிக அளவில் பரவலாக அறியப்படாத ஆனால் பெரும்பாலான குழந்தைகளை பாதிக்கும் நோயாகும்.
ஒண்ணரை வயதுல இருந்து 5 வயது வரையான குழந்தைகள் இதுனால பாதிக்கப்படறாங்க. இது ஒரு சிறுநீரகம் தொடர்புடைய நோய்.
அறிகுறிகள்கீழ்க்கண்ட அறிகுறிகள், குழந்தைகளிடம் தென்பட்டால் உடனே குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் செல்லுங்கள்:
- தூங்கி எழும் போது கண் இரப்பைகள் வீங்கி காணப்படும். பகலில் கண்ணைச் சுற்றி உள்ள வீக்கம் படிப்படியாக வடிந்து உடம்பில் அல்லது காலில் வீக்கம் (edema) காணப்படும்.
- கவனிக்கும் படியாக குழந்தைகளின் எடை அதிகரிக்கும்.
- மிக சிறிய அளவில் சிறுநீர் வெளியேறுதல் (less frequent urination) / சிறுநீர் மஞ்சளாக அடர்த்தியாக வருதல்/சிறுநீர் வெளியேறாமை.
- காய்ச்சலுடன் இந்த அறிகுறிகள் தென்பட்டால் இதன் தீவிரம் அதிகமாகும்.
குழந்தைகளுக்கு எப்பொழுதாவது கண்களில் அல்லது எந்தப் பகுதிலாவது வேறுபாடான வீக்கம் தென்பட்டால், "குழந்தை தூங்கி எழுந்தா இப்படி தான் வீங்கும்" அல்லது "உடம்பு சூடு" போன்ற இலவச அறிவுரைகளிலிருந்து பிய்த்துக் கொண்டு pediatrician-னிடம் ஓடுங்கள். இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே Pediatric Nephrology-ல் சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.
ஒருமுறை கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருந்தாலும் கூட, மறுபடி பலமுறை இது திரும்பி வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு (relapse). அதனால் வீட்டிலேயே கண்டறியக்கூடிய Protein Sticks-ஐக் கொண்டு வாரம் இருமுறையாவது சிறுநீர் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.