கடலை உடச்சு 40 காசு வாங்கின உற்சாகத்துல, வீட்டுக்காரம்மா தோட்டத்துக்கு, வெங்காயம் தாள் அறுக்க போனது வேற கதை. ஒரு பெரிய சாடு நிறைய சின்ன வெங்காயம் தாள் அறுத்துக்குடுத்தா 2 படி வெங்காயம் குடுப்பாங்க. எங்க அம்மா வீட்டுல வேலை செஞ்சுட்டு தாள் அறுக்க கிளம்பிடுவாங்க. லீவ் நாளுன்னா நானும் கூடப்போய் கொஞ்சம் தாள் நறுக்கி குடுத்துட்டு வருவேன் . சின்ன பிள்ளைகளால ஒரு நடுத்தரமான கூடை தான் அறுக்க முடியும். சாடு ரொப்பறதுக்கு அதே மாதிரி 3,4 கூடை அளவாகும். சின்ன புள்ளைக சாடுக்குள்ள போய் ஒளிஞ்சுகிட்டு விளையாடலாம். அத்தனை பெருசு.
எங்க வீட்டுகாரங்க வீடு எப்படீன்னா, இது மாதிரி நெல்லு, வெங்காயம்னு கொட்டி சேமிச்சு வச்சுக்கற மாதிரி பெரிய வராண்டா,திண்ணை,வாசல்ன்னு அமர்க்களமா இருக்கும். மத்தியானமெல்லாம் எல்லா பொம்பளைகளும் ஒரே எடத்துல சேர்ந்தாங்கன்னா கேக்கணுமா. ஒரே கலக்கலா இருக்கும் போங்க. வெத்தல பாக்கு போடறது, பாதி இல்லைன்னா ஒரு வெத்தல அடுத்தவங்ககிட்ட கேட்டு வாங்கறது, யாராரு வீட்டுல என்னென்னனு நாயம் அடிக்கறதுன்னு ஒரே பிஸியா இருக்கும். ஆனா கைபாட்டுக்கு தாள் அரிஞ்சிட்டு இருக்கும். வெங்காயம், தாளு, ஈர மண்வாசம், பெருசுங்க போடற வெத்தலை பாக்கு ன்னு அந்த எடமே ஒரு கலவையான வாசம் அடிக்கும். நான் அதுக்கும் எங்க வீட்டுக்குமா ஒரு ரவுண்டு அடிச்சுக்கிட்டே இருபேன். நான் வெங்காயம் தாள் அரிச்சு சம்பாதிச்சதெல்லாம், எங்க வீடு இட்லிக்கு, வெங்காய சாம்பார் செஞ்சே காலியாப்போச்சு. ஆனா மனசுல அந்த வாசம் அப்படியே இருக்கு.
காலேஜ் முடிச்சு வேலைக்கு வந்தப்பறம் முதல் மாச சம்பளமா 1500 ரூ செக்கா வாங்கினேன். அக்கா வீட்டுல இருந்து வேலைக்கு போயிட்டு இருந்ததால செலவு ஒன்னுமில்ல. அதை அப்படியே பேங்குல போட்டுட்டேன். என் முதல் மாச சம்பளம் இன்னும் செலவாகலை.
No comments:
Post a Comment