Saturday, December 8, 2012

எந்துகோ ஏமோ? (Enthuko emo evariki telusu)

This question is posted by me in Sri.Sanjay Subramanyams FB page. Saved it here for reference.






Monday, December 3, 2012

பறவைகள்

நிழல்கள் காலைக்
கடக்கின்றன

தலைக்கு மேலே
பறவைகள்

என்ன பேச ?

திரும்பிப் பார்ப்பதற்குள்
என் வார்த்தைகளை எல்லாம்
தின்றுவிட்டிருந்தது மெளனம்

என்ன பேசுவது என்பதே
பெரிய கவலையாயிருக்கிறது
இப்போது.

Friday, November 2, 2012

வாங்குவதில் இன்பம்

யார் என்ன சொன்னாலும் சரி. எனக்கு வாங்குவதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது. அது எனக்கான பொருளானாலும் அல்லது மற்றவர்களுக்கான ஒன்றானாலும். இந்த விஷயம் எனக்குப் புரிபட ஆரம்பித்ததிலிருந்து நான் வாங்கும் ஒவ்வொரு பொருளையும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பார்க்கத் தொடங்கி இருக்கிறேஎ. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே என் தந்தை எனக்கு தேவையானவற்றை நானே தேர்ந்ததெடுத்துக் கொள்வதையே மிகவும் ஊக்குவித்தார். அவருடன் கடைக்குச் சென்று தீபாவளி, மற்ற விஷேசங்களுக்கு துணிகள்,மற்ற பொருள்கள் வாங்கிய நாட்கள் மிக இனிமையனவை. அந்த வயதில் எனக்குப் பிடித்த வண்ணத்தில் வாங்கிய உடைகள் எனக்குப் மிகச் சரியாக பொருந்தாவிடினும் அல்லது என் தோற்றத்தை அழகாகக் காட்டாவினும் என் மனதில் தோன்றிய மகிழ்ச்சியயும் திருத்தியின் வெளிப்பாட்டையும் நான் இன்றும் நினைவில் வைத்து இருக்கிறேன். ஆனால் முன்பு வீட்டு உபயோகப் பொருள்களில் நான் அதிக ஆர்வம் காட்டியதில்லை. மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு அன்று பெரிய தேவைகளும் ஏற்படவில்லை.

எங்கள் வீட்டின் முதல் விலையுயர்ந்த பொருளான இரும்பு அலமாரி வாங்கிய தருணம் என் நினைவில் இல்லை. என் வயதை விட அதற்குச் சில வருடங்களே குறைவாக இருக்கலாம். :). வீட்டில் எரிந்து கொன்டிருந்த் டங்ஸ்டன் குண்டு விளக்கிற்கு பதிலாக குழல் விளக்கு வந்த கதையை அம்மா மூலமே கேட்டிருக்கிறேன். நான் எட்டாவது முழு ஆண்டுத் தேர்வு எழுதி முடித்த அன்று தந்தையின் ஓய்வு பெறும் நாள். சக ஆசிரிய நண்பர்களின் அன்பளிப்புத்தொகையுடன் மேலும் தொகை சேர்த்து அந்நாள் நினைவாக ஒரு மின்விசிறியும்,மிக்ஸியும் வீட்டில் வந்திறங்கின. அதற்குப்பின் நாங்கள் சேர்ந்து இருந்த 7 வருடங்களில் கிரைண்டர் அம்மாவின் விருப்பத்தின் பேரிலும், 2 மடக்கு நாற்காலிகள் தந்தையின் நண்பரின் தேர்ந்தெடுத்தலின் விளைவாகவும் வந்தன. நான் இளநிலைக் கல்லூரி முடிக்கும் வரையிலும் கூட எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்ததில்லை. படிப்பு முடிந்து வேலைக்காக ஹைதராபாத் வந்ததில், அக்கா வீடு மேலும் பல செளகரியங்கள் நிறந்த வீடு. அன்றும் எனக்கென பெரிய தேவைகள் என்றும் இருந்ததில்லை.

வளர வளர இந்தத் தேர்ந்தெடுக்கும் நிலை வெறும் துணிகளில் இருந்து விரியத் தொடங்கியிருந்தது. சந்தைக்குச் சென்று காய்கறிகளைப் பொறுக்கி வாங்குவதில் என் ஆர்வம் கூட ஆரம்பித்தது. 

என் திருமணத்திற்குக்கூட புடவைகளையும்,சில அணிகளையும் தவிர வேறு தேர்வு செய்வதற்கான தேவை ஏற்படவில்லை. என் திருமணத்திற்கான என் பெற்றோர் சேர்த்து வத்திருந்த புதிய பாத்திரங்களை மட்டுமே ஊரை விட்டுக் காலி செய்ய்து வரும் வேளையில் கொன்டு வந்திருந்தோம்.

பல வருடங்களாக இருப்பதைக் கொண்டு சமாளித்துக் கொண்டு வந்த மனதில் சில வருடங்களாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருகின்றன. "Home Sweet Home " என்ற நினைப்பில் எனக்குத் தேவையான பொருள்களை முதல் முறையாக வாங்க மனம் அலைபாய்கின்றது.

இந்தப் பல வருடங்களில் நான் என் தேவைக்கென தேர்வு செய்து வாங்கிய பொருள் காமிரா மட்டும் தான். அதற்கு என் மனதில் என்றும் ஒரு நீங்காத இடம் இருக்கிறது. பத்து வருடங்களுக்கும் மேலாக நான் வேலைக்குச் சென்றதில் நான் தேர்வு செய்து வாங்கிய பொருள் என்ன?. ஒன்றுமே இல்லை. வாழ்க்கையில் இதுவரையில் கிடைக்காத வாய்ப்புகள் இப்போது கிடைக்கும் பட்சத்தில் எனக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து வாங்குவதில் உள்ள இன்பத்திற்கு இணையில்லை. அப்பொருள் மற்றவர்களின் பார்வையில் தரத்தில் குறைந்து இருந்தாலும் ,என் வரையில் எதிர்பார்ப்பினை நிறைவு செய்து மகிழ்ச்சியை அளிக்கலாம். ஒருவேளை நான் மறுபடியும் வேலைக்குச் சென்று வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் எனக்கு மகிழ்ச்சியை அளிக்ககூடிய ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குவேன். அதில் வரும் ஹாரி-பாட்டர் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் மேலும் கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்துக்கொண்டு பிடித்தமான அலை வரிசைகளை இஷ்டம் போல் மாற்றிப் பார்ப்பதற்காகவும். :)

Saturday, October 6, 2012

Pattern Matching Algorithm

கர்னாடக சங்கீதத்தில் எத்தனையோ ராகங்கள் உண்டு. பல பேர் அவற்றை கற்றுக் தேர்தலையும், அவற்றை நன்கு பாடுவதற்குக் குரல் வளத்தையும் செவ்வனே பெற்று முழுநேர இசை வித்வான்களாக இருக்கிறார்கள். மேலும் பல பேர் கச்சேரிகளில் சென்று ரசித்தாலும் , அவர்களும் நன்றாகப் பாடக்கூடிய திறமை பெற்று இருக்கிறார்கள். நான் என்னவோ இதில் கட்டங்கடைசி பெஞ்சு ரகம் தான். சில ராகங்களை என்னால் கண்டுபிடிக்க மட்டுமே முடிகிறது. சரி அவற்றைப் பற்றி கொஞ்சம் விரிவாக கற்றுக் கொள்ளலாம் என்றால் ஒன்றும் உருப்படியாக செய்ய முடியவில்லை. MP3 ப்ளேயரில் மகாராஜபுரம் சந்தானம் இழைந்து கொண்டு இருந்தார். சடாரென ஒரு வார்த்தை தான் தோன்றியது "வசந்தா". ஓடி போய் சரி பார்த்தால் அதே தான். என் அப்பா , இது வசந்தா ராகம் என்று பாடிகாட்டியது காதில் கேட்கிறது. மனதில் தெரிகிறது. ஆனால் எனக்கும் பாட வராது. எனக்கு தெரிந்த ராகங்களைக்கூட எனக்கு சொல்லிக்காட்ட வருவதில்லை. அதற்குரிய ஸ்வரங்களை க்கூட எனக்குத்தெரிவதில்லை. எனது மூளை சில ராகங்களுக்கும் மட்டும் வேலை செய்யக்கூடிய pattern matching algorithm மனசுக்குள் போட்டு வைத்து விட்டது போல் இருக்கிறது. (அப்பாடா! ஒரு வழியாகத் தலைப்புக்கும் பத்திக்கும் ஒரு தொடர்பு குடுத்தாச்சு). இந்த pattern matching-க்கும் நினைவு சக்திக்கும் ஒரு நல்ல பிணைப்பு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். நாம் கேட்ட ராகங்களை , நமது மூளை ஆழ் மனதில்  எங்கேயோ ஒளித்து வைத்துக் கொள்கிறது. ஓரளவு நினைவாற்றல் உள்ளவர்களால் மறுபடி கேட்ட உடனே நினைவுகளில் தேடி எடுக்க மூளை உதவுகிறது. இந்த ஞாபக சமாச்சாரங்கள் வெறும் பயிற்சி மட்டுமே அல்ல. அது நம் முன்னோர்களின் ஜீன்களில் இருந்து வரும் என்று எனக்குத் தோன்ற ஆர்ம்பித்து இருக்கிறது.பள்ளி வகுப்பில் இருந்து அலுவலகம் வரை என் ஞாபக சக்தி மிகப் பிரசித்தம்.  என் அப்பா ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது,"அமரசிம்மன்" படத்தைப் பார்த்துவிட்டு வந்து, போர்வையைப் போர்த்துக்கொண்டு பாடங்களைப் பரீட்சைக்கு நினைவு படுத்திப் பார்த்துக்கொண்டிருந்ததைச் சொன்னபோதும், இன்னும் பல து ஞாபக சக்தி பற்றி சொன்னபோதிலும் என் ஞாபகத் திறன் அப்பாவிடமிருந்து வந்து இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அம்மா சாதாரணமாக என்னிடம் இப்போதேல்லாம் பேசுகையில், "2 வருஷத்துக்கு முன்னாடி, என் பார்க்கு பிரெண்ட் கிருகபிரவேசத்துக்கு போனபோது எனக்கு ஒரு எவர்சில்வர் தட்டுல ,மைசூர் ப்பாகு, முறுக்கு, கிளிப்பச்சை ரவிக்கைத் துணி எல்லாம் போட்டு ஒரு ப்ளூ கலர் பையிலே போட்டுக்குடுத்தா" அந்தத்துணிய இங்கே தான் பீரோல ஒரு மஞ்சள் துணிப்பையில போட்டு 3 வது தட்டுல வலதுபக்கம் 2 வது புடவைக்கு அடியில ரெண்டா மடிச்சு வைச்சு இருந்தேன். அதை காணலயே" என்று பலவற்றைப் போட்டு புள்ளி விவரப்புலியாக என்னைப் போட்டுத் தாக்குகிறாள். :). நானும் அவற்றை தேடி சலித்த போது சில பொருள்கள் கைக்கு அகப்பட்டு அங்க அடையாளங்கள் பொருந்தி என்னைக் கொஞ்சம் காப்பாற்றின. அம்மா பெரும்பாலும் எல்லா பொருள்களுக்கும் அல்லது நிகழ்ச்சிகளுக்கும் நேற்றய கணம் முதல் சுமார் 50 வருட ஹிஸ்டரி-ஐ த்தெளிவாகச் சேகரித்து மூளையில் வைத்துக் கொண்டு நாம் எதாவது சொல்ல ஆரம்பித்தவுடனே அட்டகாசமாக pattern matching செய்து எல்லா விபரங்களையும் ஒப்பிக்கத் தொடங்கி விடுகிறாள். எனக்குத் தான் அதை நிறுத்துவதற்குள் தலைசுற்றிப்போய் விடுகிறது :). அடுத்து நிலாக்குட்டி, பேசத்தெரியாத வயதிலேயே, அக்கா எங்கேயோ கைமறதியாக வைத்து விட்டுத் தேடிக்கொண்டிருந்த பொரி பாக்கெட்டை, அவளிடம் கேட்ட மாத்திரத்தில் ஒடிச் சென்று கண்டுபிடித்துக்கொடுத்தாள். இந்த வரிசையில் புது வரவாக கண்ணனும் 1+ வயதிலிருந்தே இதிது சே சேம் (இதுவும் இதுவும் சேம் சேம்) விளையாட்டில் பின்னி எடுக்கிறான். ஆக மொத்தம் இந்த pattern matching அறிவு வழி வழியாக அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லுகின்றன என்பதே என் தீவிர ஆராய்ச்சியின் முடிவாகும். மனித குலத்துக்கு முக்கியப் பங்காற்றிய என் இந்த ஆராய்சிக்காக எனக்கு வீடு தேடி வரப்போகும் முனைவர் பட்டத்தினையும் நோபல் பரிசினையும் வாங்குவதற்கு இப்போதிலிருந்தே காத்துக் கொண்டிருக்கிறேன் :).

Thursday, October 4, 2012

ஜெயமோகன் கட்டுரைகள்:ஒரு வாசித்தலுக்கு அப்பால்

தலைப்பைப் பார்த்தவுடன் யாரும் இது தீவிரமான இலக்கிய விமரிசனமாக இருக்குமோ என்று பயப்பட்டு விடவேண்டாம். ஜெயமோகன் நாவல்களைவிட அவரது சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. பல வருடங்களாகவே அவரது கட்டுரைகளின் விசிறி நான். அவரது குழந்தைகள் அஜிதனும்,சைதன்யாவும் எனக்குள்ளும் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என ஒரு குரல் எனக்குள் எப்போது ஒலித்துக்கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் அவர் பெண் குழந்தையை பற்றி எழுதியதில், எல்லா தகப்பனும் எதோ ஒருகணத்தில் தனது பெண் குழந்தையை ஆராதிக்கும் கணத்தை உணர்வார்கள்.(கட்டுரை பெயர் நினைவில்லை.தேட வேண்டும்). இப்போது நிலாவும் கண்ணனும் பேசுவது எனக்கு அடிக்கடி இவர் குழந்தைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளையே நினைவூட்டுகிறது. துள்ளல் நடையில் எள்ளல் கலந்து எழுதிய பல நகைச்சுவைக்கட்டுரைகளை அலுவலகத்தில் படித்து, அடக்கமுடியாமல் சிரித்து விட்டு நண்பர்களில் கேள்விக் கணைகளுக்கும் பதி சொல்லமுடியாமல் தவித்திருக்கிறேன் நான். கடுமையான மனச்சோர்வு எற்ப்படும் போது இவரது நகைச்சுவை கட்டுரைகளைப் படித்தால், கவலைகளை எல்லாம் "லே மக்கா, விடுடா.அதெல்லாம் தூக்கிப்போடுடே" என்று சிரித்துக்கொண்டு வேறு வேலையை பார்க்கும் அளவிற்கு ஒரு சின்ன உற்சாகத்தைக் காண்கிறேன் என்னிடம் , அது தற்காலிகமாக இருந்தாலும் அது போது எனக்கு.

Sunday, September 30, 2012

கோடுகள்

சில கோடுகள் எங்கிருந்தோ வந்தன

இரண்டு ஒன்றை ஒன்று பார்த்தன

வெட்டிச் சென்றன முற்றுப் புள்ளி தேடி

காலம் போய்க்கொண்டு இருக்கிறது

ஒரு கோட்டுக்குப் பின்னால் சில புள்ளிகள்

Tuesday, September 25, 2012

மொட்டை மாடி! மொட்டை மாடி !!

பின் வீட்டு மொட்டை மாடியில் ஐந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் ரொம்ப மும்மரமாகக் கையில் கார் ஓட்டிக்கொண்டு இருந்தான். 4 பெண்கள். அவர்களில் இருவர் எதோ ஒரு புடவைத்துணியை வைத்துக்கொண்டு அவர்களின் உலகில் நடை பயின்றுகொண்டிருந்தனர். ஒரு துண்டுத்துணியைப் போர்த்திக் கொண்டவுடன் அம்மாவாகி விட பெண் குழந்தைகளால் மட்டுமே இயலும். அந்த துப்பட்டா போர்த்திகொண்ட அழகிய சிறு பெண்ணின் அழகினையும் நளினத்தையும் நான் எங்கும் கண்டதில்லை. ஒரு பூந்தோட்டத்தில் ஒரு பூ மட்டும் அங்கும் இங்கும் திரிவது போல அவள் தன் சிறு தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். இறைவனை விட அவரது பெயர் தான் பக்தர்களுக்கு பிரியமானது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கு அம்மாவை விட அம்மாவின் புடைவைத்துணிகள் குழந்தைகளுக்கு உறவாகின்றன. பெரியம்மாவுக்கும் மிகப்பிரியமுள்ள நிலாக்குட்டி , ஒரே ஒருமுறை பெரியம்மா லேசாகக் கடிந்து கொண்டதும், பெரியம்மாவின் ஒரு புடவையைத் தேடி எடுத்து வெகு நேரம் அதைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டுத் தான் உறங்கினாள். மற்ற இரு குழந்தைகளும் கூட ஓடித் தாங்களும் ஒரு துணியை தலையில் மணப்பெண் போல முக்காடு போட்டுக் கொண்டு ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தனர். எனக்கு நான் துண்டில் தொட்டில் கட்டி கல் குழந்தை போட்டு விளையாடியதும், என் அக்காவின் பிரபல விளையாட்டு வாசகங்களான "மாமி எனக்கு 8 குழந்தைகள்" எங்காத்துக்காரர் வேலைக்குப் போய்ட்டார். குழந்தைகள் ரொம்பப் படுத்தறா" என்று சின்ன அக்கா  ஒரு துண்டை மேலாக்காக போட்டுக்கொண்டு விளையாடுவாள் என்று அப்பா சொன்னதும் நினைவுக்கு வந்தன. சிறிது நேரத்தில் அந்த இடம் வெறும் மொட்டை மாடியானது. ( எழுதியது :ஜூன் 16-2012 )

Tuesday, September 11, 2012

சில பேரீச்சம்பழங்களும் நாட்களும்

நிலா சற்று நேரத்துக்கு முன் பிரிட்ஜிலிருந்து பேரீச்சம்பழங்களை எடுத்துச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

நிலா   : அம்மா!!.. .இது பேர் என்னம்மா??
நான்   : பேரீச்சம் பழம்.

நிலா   : இங்கிலீஷ்-ல?
நான்   : டேட்ஸ் (dates)

நிலா   : டேட்ஸ்ஆ? ...... [ஒரு நிமிடத்துக்குப்பின்]

நிலா   :  அம்மா...இதுக்கு பேர் எதுக்கு டேட்ஸ்ன்னு வைச்சுருக்கா தெரியுமா?
நான்   : நீயே சொல்லு குட்டி...

நிலா   : இந்த டேட்ஸ் சாப்ப்டா dates எல்லாம் சரியா சொல்லலாம். அதான். இன்னிக்கு
            date என்ன?

நான்  :  .............. ????


குழந்ததைகள் என்னமா யோசிக்கிறார்கள்... :)

பிறந்தநாள் பரிசு.

இந்த பிறந்த நாள் என்று ஒன்று வருகிறது என்றாலே எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சி வந்து விடுகிறது. அதுவும் சின்னக் குழந்தைகள் அதைக் கொண்டாட்டத்துடன் எதிர்பார்ப்பார்கள் தானே. வழக்கமான பரிசுகளுக்கு மத்தியில் தற்போது "ரிடர்ன் கிப்ட்' என்ற பெயரில் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி டப்பா, பென்சில் பாக்ஸ் இன்னும் சில பல பொருட்களைக் கொடுக்கும் பழக்கம் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. நிலாவும் தற்போது பள்ளி விட்டு வரும் போது பார்பி பென்சில் டப்பா, உண்டியல், மெழுகுக்கலர் பென்சில்கள், ஸ்கெட்ச் போன்றவற்றை மற்ற குழந்தைகளின் பிறந்த நாளுக்காக எல்லாக் குழந்தைகளுக்காகவும் கொடுத்தார்கள் எனப் பலவற்றைக் கொண்டு வருகிறாள். இவை யாவுமே மலிவு விலைத்தயாரிப்புகள். பெரும்பாலும் சீனா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த மாதிரியான பிளாஸ்டிக் பொருள்கள் பெரும்பாலும் தரமற்றவையாகவே இருக்கின்றன. இவை மீது ஒட்டப்பட்டுள்ள கார்ட்டூன் வடிவங்களுக்காகவே குழந்தைகளிடம் பிரபலம் ஆகின்றன அன்றி இவ்வாறான ஒரு பென்சில் எழுதுவதற்கு தரமில்லாததாகவே இருக்கிறது.மற்றும் இவை ஒரே மாதிரியாக இருப்பதினால் குழந்தைகளுக்கிடையே சண்டை ஏற்பட வழிவகுக்கிறது. பலசமயங்களில் பென்சில், மெழுகு கலர் பென்சில், ரப்பர் இவைகள் தேவைக்கு அதிகமாக வந்து விடுவதால், அவற்றை பத்திரமாக வைப்பது போய் சமயத்தில் வீடு முழுக்க இறைத்து வீணடிக்கிறார்கள். சிலர் ஆசைப்பட்டு குடுக்க ஆரம்பித்த விஷயம் இப்போது மற்ற குழந்தைகளின் பிறந்த நாளுக்கு செய்வது போன்று தன் குழந்தையின் பிறந்த நாளுக்கும் குடுத்து அனுப்பவேண்டுமென்ற எண்ணத்தைக் கிளறி விடுகிறது.  பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை கூடிய வரை தவிர்க்க வேண்டும் என்று அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதற்கு பதிலாக நாம் மறுபடியும் "தினம் தினம் ஒரு தினம்" என்ற விளம்பர மோகத்தில் மிக நுட்பமாக நமது ஆடம்பர செலவுகளை அத்தியாவசியமான ஒன்றாக மாற்றி காட்டக்கூடிய , வெளியே குவித்து வைக்கப்பட்டுள்ள சந்தைப் பொருட்களின் மாய வலையில் மாட்டிக் கொள்கிறோம்.

 அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் குழந்தைகளுக்கு சிறிய பரிசுப் பொருட்களைத் தர வேண்டுமென நாம் பிரியப்பட்டால், நிஜமாகவே அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய பொருள்களைத் தரலாம்.

நிலாவின் பிறந்த நாள் செப்டெம்பர் 28 தேதி வருகிறது. எனக்கு ஒரு மாதத்திற்கு மேலாகவே அவளுடைய பிறந்த நாளுக்கு என்ன கொடுப்பது என்று யோசித்து யோசித்து குழம்பிப்போன வேளையிலே வந்த எண்ணங்கள் இவை.

Monday, September 10, 2012

கண்ணனும் மம்முவும்

பெரியம்மா   :  (சமயலறையிலிருந்து)  கண்ணா பசிக்கறதா? என்ன மம்மு
                              டா வேணும்?

கண்ணன்      :  (மெதுவான குரலில்) ரசம் மம்மு.

பெரியம்மா   :  (சமயலறையிலிருந்து வெளியே வந்து) நீ சொன்னது 
                              கேக்கலை. என்னடா குட்டி வேணும்??

கண்ணன்     : (சத்தமான குரலில் ) கோளி மம்மு.

பெரியம்மா, பெரியப்பா, பாட்டி :   என்ன்ன்ன்ன????????????
(யாருடா சொல்லிக்குடுத்தா???? பூர்ணா உன் புள்ள என்ன சொல்றான்னு கேளு.... .கோளி மம்மாமே???

பூர்ணா          : அவ்வ்....எங்கடா புடிச்சே இதெல்லாம்???. யாரு சொல்லிக்
                           குடுத்தா........  :-(.  :-(.  

Thursday, June 7, 2012

ஒரு குடும்பம் ஒன்று சேர்கிறது

[பத்து வருடங்களுக்கு முன்னால்]

அக்கா!!! ....சுப்பக்கா.....

வாடா சந்தா! பிரயாணம் எல்லாம் கஷ்டமா இல்லயே...செளரியமா இருந்துதா..

கஷ்டமா இல்லக்கா....நானும் உன்ன எப்போ பார்ப்பேன்னுதான் இருந்தேன்......உன்னப் பார்த்து ரொம்ப வருசமாயுடுத்தே அக்கா.
உன்ன பார்க்காம ,பேசாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது அக்கா....இங்கெ லெட்டர் கூட போட முடியாது. என்ன "சந்தா"ன்னு வாய் நெறய கூப்பிட அங்கே யார் இருக்கா எனக்கு.

எனக்கும் உன்னப்பத்தியேதான் நினைப்பெல்லாம். அக்கா அக்கான்னு காலைச்சுத்திண்டே தானே இருப்பே. நான் இங்கே இருந்தாலும் மனசெல்லாம் அங்க தான் இருந்தது. உன்கூட இருந்தால் என்னென்னவோ ஸ்லோகம் எல்லாம் கேட்டு தெரிஞ்சுண்டு நாம ரெண்டு பேரும் சொல்லிண்டு இருக்கலாம். உன்னப்பார்த்தாலே தெம்பா இருக்கு சந்துரு. பார்வதி குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கா?. எல்லார்கிட்டயும் என் ஆசீர்வாதங்களை சொன்னியா.

[இடையில் யாரோ]

டேய் சந்துரு ....இது எங்க சுப்பக்காடா...
சந்துரு: சொல்லுவே சொல்லுவே.....எங்க சுப்பக்கா......
சுப்பு: என்னடா ...சின்ன வயசுலதான் அவன அழ விட்டேள்ன்னா..இப்பவும் இப்படி சொல்லறயே...நான் என்னிக்கு அவன் சுப்பக்கா தான். அவனும் என் சந்தா தான்.

நீ என் பக்கத்திலே இருந்தா ஒரு கவலையும் இல்லெ எனக்கு. அன்னிக்கு ரொம்ப மனசு ஒடைஞ்சு போய்ட்டியே. எனக்கு ரொம்ப பயம்மா இருந்துது.என் கூடவே வந்துடுவியோன்னு. இன்னும் பொறுப்பு இருக்கேடா உனக்கு.

இல்லக்கா.... இப்பொ எல்லாப் பொறுப்பையும் கீதா ராஜாட்ட ஒப்படைச்சுட்டேன். இனி அது அவா கவலை. எனக்கு இனிமே தெம்பு இல்லை அக்கா.  மனசாட்சிக்கு விரோதமில்லாம இருந்தேன்னு திருப்தியா இருக்கு. ஒருத்தருக்கும் அது செய்யலை, இது செய்யலைன்னு எனக்கு உறுத்தல் இல்லை. என்னால முடிஞ்ச வரைக்கும் செஞ்சிருக்கேன். "I lived my life"

சரி வா..அத்திம்பேர் அங்க இருக்கார் பார். அப்புறம் நாம ரெண்டு பேரும் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லலாம். நான் சரியா சொல்றேனான்னு பார்.

......

இங்கே புகைப்படத்தில் அக்கா தம்பி  சுப்புலக்ஷ்மியும்-சந்திரசேகரனும்  சிரித்துக்கொண்டு இருக்கின்றனர்.
            
                            

[பத்து நாட்களுக்கு முன்னர்]

"சந்தா அங்கே பார் சுப்பையாவும் வந்துட்டான் பார்."

"சுப்புக்கா"....சந்துருண்ணா.......

கடைசில நானும் வந்துட்டேன்..... திப்பியும் எனக்கு முன்னாடியே வந்துட்டாளே.....எனன மட்டும் தனியா விட்டுட்டேளே..

"திப்பி" "கிட்டுண்ணா" "சங்கரண்ணா" "குப்புக்கா" "மீனுக்கா"

எல்லரையும் பார்த்து ரொம்ம்ம்ப வருஷமாச்ச்சே....

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு அப்புறம் சகோதர சகோதரியர் அனைவரும் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது....

அறையில் "அண்ணா" "அக்கா" "சங்கரசுப்பா" "கிட்டு" "சுப்பு" "சந்துரு" "திப்பி" "குப்பு" "மீனு" "சுப்பையா" என்று பாசமாக அழைக்கும் குரல்களே நிரம்பியிருக்கின்றன.

[இன்று]

சரி சரி...கமலண்ணாவும் முத்துமன்னியும் நம்ப எல்லாரையும் சேர்ந்து பார்க்கணும்னு ரொம்ப காலமா தவம் கெடந்துண்டு இருக்கா....எனக்கும் நம்ம அம்மா அப்பாவை எல்லாரும் சேந்து பார்க்கணும்னு மனசு அடுச்சுக்கறது...வாங்கோ போலாம்....

[அனைவரும் ஒரே குரலில்]....................."முத்துமன்னி-கமலண்ணா"

வாங்கோ குழந்தைகளா.....
இப்போ எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...உங்கள்ள சில பேர் சின்ன வயசு முகம் தான் எங்களுக்கு நெனைவிருக்கு. சீக்கிரமாவே பிரிஞ்சிட்டோம் இல்லயா..... இப்போ எல்லாரும் சேர்ந்து அங்க இருக்கற எல்லா கொழந்தைகளுக்கும் ஆசீர்வாதம் பண்ணுவோம். எல்லாரும் மனசு நிறைஞ்சு சந்தோசமா இருந்துட்டு காலம் வரும் போது நம்ம கிட்ட வரட்டும்.

தீர்க்காயுஷ்மான் பவ!! தீர்க்க சுமங்கலி பவ!! சுப்ரமண்யம் !!! ஜெகதீசா!!!

கமலாசனம்-முத்துமீனாஷி [குப்புலஷ்மி,சங்கரசுப்பன்,சுப்புலக்ஷ்மி,கிருஷ்ணமூர்த்தி,சந்திரசேகரன்,
கல்யாணராமன்,திரிபுரசுந்தரி]  அவர்களின் நினைவாக....

மே 28,2012 அன்று எங்களின் சித்தப்பா திரு. கல்யாண ராமன்(சுப்பையா) அவர் பெற்றோர், சகோதர,சகோதரிகளுடன் இணைந்தார்.