பின் வீட்டு மொட்டை மாடியில் ஐந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் ரொம்ப மும்மரமாகக் கையில் கார் ஓட்டிக்கொண்டு இருந்தான். 4 பெண்கள். அவர்களில் இருவர் எதோ ஒரு புடவைத்துணியை வைத்துக்கொண்டு அவர்களின் உலகில் நடை பயின்றுகொண்டிருந்தனர். ஒரு துண்டுத்துணியைப் போர்த்திக் கொண்டவுடன் அம்மாவாகி விட பெண் குழந்தைகளால் மட்டுமே இயலும். அந்த துப்பட்டா போர்த்திகொண்ட அழகிய சிறு பெண்ணின் அழகினையும் நளினத்தையும் நான் எங்கும் கண்டதில்லை. ஒரு பூந்தோட்டத்தில் ஒரு பூ மட்டும் அங்கும் இங்கும் திரிவது போல அவள் தன் சிறு தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். இறைவனை விட அவரது பெயர் தான் பக்தர்களுக்கு பிரியமானது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கு அம்மாவை விட அம்மாவின் புடைவைத்துணிகள் குழந்தைகளுக்கு உறவாகின்றன. பெரியம்மாவுக்கும் மிகப்பிரியமுள்ள நிலாக்குட்டி , ஒரே ஒருமுறை பெரியம்மா லேசாகக் கடிந்து கொண்டதும், பெரியம்மாவின் ஒரு புடவையைத் தேடி எடுத்து வெகு நேரம் அதைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டுத் தான் உறங்கினாள். மற்ற இரு குழந்தைகளும் கூட ஓடித் தாங்களும் ஒரு துணியை தலையில் மணப்பெண் போல முக்காடு போட்டுக் கொண்டு ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தனர். எனக்கு நான் துண்டில் தொட்டில் கட்டி கல் குழந்தை போட்டு விளையாடியதும், என் அக்காவின் பிரபல விளையாட்டு வாசகங்களான "மாமி எனக்கு 8 குழந்தைகள்" எங்காத்துக்காரர் வேலைக்குப் போய்ட்டார். குழந்தைகள் ரொம்பப் படுத்தறா" என்று சின்ன அக்கா ஒரு துண்டை மேலாக்காக போட்டுக்கொண்டு விளையாடுவாள் என்று அப்பா சொன்னதும் நினைவுக்கு வந்தன. சிறிது நேரத்தில் அந்த இடம் வெறும் மொட்டை மாடியானது. ( எழுதியது :ஜூன் 16-2012 )
No comments:
Post a Comment