Monday, May 17, 2010

படித்த பாடமும் கற்ற அனுபவங்களும்…

ஏனோ தெரிவதில்லை சில நியாபகங்கள் மனதில் படிந்து விடுகின்றன.அவற்றை நம் வாழ்நாள் முழுவதும் மறப்பதற்கில்லை. நினைவிலும் கனவிலும் அதன் இழைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பத்தாம் வகுப்பில் பாடமாக இருந்த ஒன்று வாழ்க்கையில் நிழல் போல வருவதைக் கண்டால் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு தெரிந்த சில ஆங்கில எழுத்தாளர்களும் பள்ளியில் அறிமுகமானவர்களே. பத்தாம் வகுப்பில் ஒரு பாடம் “My Lost Dollor- By Stephen Leacock”. இதில் ஆசிரியர் அவரது நண்பர் ஒருவருக்கு ஊருக்கு செல்லும் சமயம் தற்செயலாக ஒரு டாலர் நோட்டை தந்துதவுகிறார்.அதன் பின் நிகழும் நிகழ்வுகளே இந்தக் கட்டுரை. சிறிய பணமாய் இருப்பினும் அதைப்பெறுவதற்கு அவர் செய்யும் முயற்சிகள் என்ன..என்ன…. குடுத்த பணத்தை திரும்ப கேட்பதற்கு எத்தனை தயக்கப்பட வேண்டியிருக்கிறது. குடுத்ததைக் சொன்னால்/கேட்டால் அடுத்தது பகை என்ற சொல்லே நினைவுக்கு வருகிறது. சிறிய கதை அந்த வயதில் பெரிய மாற்றத்தை ஏதும் உண்டு பண்ணவில்லை.ஆனாலும் மனது எங்கோ மூலையில் போட்டு வைத்திருக்கிறது.
படிப்பு முடித்து கையில் காசு புரளும் இந்த சமயம் நண்பர்களுடன் வெளியே செல்வது என்றானபிறகு…இந்த கதை நினைவுக்கு வருகிறது…நெருங்கிய நண்பர்/நண்பியுடன் செலவுகளைப் பகிர்ந்து கொள்வது என்பது கத்தியைக் கையாளுவதைப்போல் நிதானமாக செய்யவேண்டிய விசயம். இப்போதும் நண்பருடன் செல்லும் போது பணம் கொடுத்து விட்டு கேட்பதற்கு தயங்கியிருக்கிறேன். சில சமயம் முயன்று வினோதமான பார்வைகளையும் கண்டிருக்கிறேன். இதில் ஆசிரியரின் முடிவு “Back to Honesty movement”. அடுத்தவர் பணத்தை திருப்பித் தரும் முயற்சி. இதில் நேர்மை என்ற சொல்லை விட முயற்சியே பொருத்தமாக இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. கூடுமானவரை பெரும்பாலான மக்கள் யாரையும் ஏமாற்ற முயலுவதில்லை.ஆனால் வாங்கும் போது பெரிதாக இருக்கும் தேவை அதை பயன்படுத்தியவுடன் பட்சத்தில் எளிதாக மறந்து விடுகிறது. இது போன்ற சிறிய விசயங்களே பின்னர் ஏற்படும் கசப்பான நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைகின்றன. நண்பர்களுடன் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் இந்தக் கட்டுரை நினைவுகளில் மேலெழும்பி எனக்கு வழிகாட்டுகிறது.
என் தந்தை எங்களுக்குச் சொன்ன அறிவுரைகளை விட. அவரின் அடுத்தவர் சொத்து நெருப்புக்குச்சமம் என்ற வாழ்க்கை முறையே இன்று எங்களிடம் ஆழமாக பதிந்திருக்கிறது.
என் நெருங்கிய உறவினர் ஒருவரின் பண்பு என் அன்றாட வாழ்வில் ஒரு மற்றுமொரு படிப்பினையை நிறுத்தியது. நமக்கு உதவியாய் வேலை செய்யும் ஓட்டுனர்,பணிப்பெண் ,காவல்காரன், சலவைத் தொழிலாளி அவர்களின் தினக்கூலியை அப்பொழுதே அவர்களுக்குக் கொடுப்பது மிகவும் முக்கியமானது என்பது தான் அது. நமக்கு சிறியதாகத்தோன்றும் இருபது அல்லது ஐம்பது ரூபாய்கள் அவர்கள் தினத்தில் ஒரு நாள் உணவுக்கானது. மாதத்தின் முதல் தேதி அவர்களிடம் அவர்கள் உழைப்பின் கூலியைக் கொடுக்க தவறிய நாட்களில் எதோ தவறு செய்கிறாற்போல் என் மனது இடித்துரைக்கிறது.
பெரியோர்களின் அறிவுரை வழங்கும் சொற்களை விட அவர்கள் பின்பற்றும் தினசரி வாழ்க்கை முறைகளையே அடுத்த தலைமுறைகள் எளிதில் கிரகிக்கின்றன. அது நல்லவைகளானாலும் அல்லது கெட்டவைகளானாலும்.
செப்டம்பர் 8, 2008

No comments:

Post a Comment