Monday, May 24, 2010

பை தொலைந்து விட்டது

நேற்று நிலாக்குட்டி அவள் அப்பாவுடன் ஸ்கூட்டர்ல போகும் போது, அவளோட கைப்பை தொலைந்து போய் விட்டது. ரோட்டில் கை தவறி கீழே விழுந்ததைத் திரும்பி வந்து எடுப்பதற்கு முன் யாரோ தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள். அவள் பை திரும்ப வேண்டுமென்று கொஞ்சம் அழுதாளாம்.அதில் நான் அவளுக்கென்று ஆசையாய் வாங்கின மூணு அடுக்கு மாலையும், நிலாவோட பாட்டி ஆசையாய் அவளுக்காகவென்று மோண்டா மார்க்கெட்டில் வாங்கின வளையலும் இன்னும் அவளின் சேமிப்பு 15 ரூபாயும் இருந்தது. எடுத்துக்கொண்டு போனவர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவங்களுக்காவது ஆகட்டும். எனக்கு அந்த பையை ரொம்ப பிடிக்கும். அதை எடுக்கும் போதெல்லாம் மெத்தென்று ஒரு பூனைக்குட்டியைப் போல இருக்கும். இனிமேல் நிலாவின் பொருள்கள் உள்ள பையில் "இது ஒரு குட்டிக் குழந்தையின் பை" என விலாசத்துடன் சீட்டு எழுதி வைக்கலாம் என்று இருக்கிறேன். ஒருவேளை பையை எடுப்பவர்களுக்கு அது ஒரு குட்டி குழந்தையின் பொக்கிஷம் என்று உணர்த்துவதற்கு. அவர்களும் சிலசமயம் பையை திருப்பிக்கொடுத்து பாப்பாவின் முகத்தில் சிரிப்பை வரவழைக்கப் பிரியப்படலாம்.

1 comment:

  1. நாம் வெளியே கிளம்பும்போது பர்ஸ், சாவி, ஹெல்மெட், கர்ச்சீப் எல்லாம் எடுத்துக்கொள்வது ஒரு சடங்காகப் போய்விட்டது. நாம் எடுத்துக்கொள்கிறோம் என்று அவளும் கையில் ஒரு பையையோ பர்ஸையோ எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். அதை அவள் கையில் மாட்டிக்கொண்டு "இரு நானும் செருப்பு போட்டுண்டு வரேன், விட்டுட்டுப்போய்டாத" என்று சொல்வது அழகு.

    சமீபத்தில் அவள் ஒரு பொருளை இழப்பது இது இரண்டாவது தடவை (வெகுநாட்களுக்குமுன் வண்ணமயமான மெத்தென்ற ஒரு பந்தைத் தொலைத்தாள், நினைவிருக்காது). இதற்குமுன் ஒரு நீல நிறச்செருப்பைத் தொலைத்தாள். அது ஏன் திரும்பக்கிடைக்கவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. நான் வீட்டுக்குள் நடக்க ஒரு நீல நிறச்செறுப்பைப் போட்டுக்கொள்வதால் அவளும் நீலச்செருப்பு போட்டுக்கொண்டு நடப்பாள். அதற்குப்பின் ஒரு செறுப்பு வாங்கிக்கொடுத்தேன், அது வேறு நிறமானதால் வீட்டில் அணிய மறுத்துவிட்டால். நானும் வீட்டுக்குள் காலணி அணிவதை விட்டுவிட்டேன்.

    ReplyDelete